3 ஸ்மார்ட் சிட்டிக்கு முதலீடு; 36 ரஃபேல் ஜெட்; நரேந்திர மோடி – ப்ரான்ஸ்வா ஹாலண்ட் கூட்டறிக்கை

modi-holland பாரீஸ்: பிரான்ஸுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் பாரதப் பிரதமர் மோடி. அங்குள்ள எலிஸி அரண்மனையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் பிராஸ்வா ஹோலண்டும் கூட்டாக அறிக்கை அளித்தனர். அந்தக் கூட்டறிக்கையில், இந்தியாவில் 3 ஸ்மார்ட் நகரங்கள் வளர்ச்சிக்கு பிரான்ஸ் 2 பில்லியன் யூரோ முதலீடு செய்யும். ரஃபேல் குறித்து பேசினோம், அதைப் பற்றி பிரதமர் மோடி உங்களிடம் சொல்வார் என்று ஒதுங்கிக் கொண்டார் பிரான்ஸ்வா ஹோலண்ட். அதன் பின்னர் மோடி பேசியபோது, பறப்பதற்குத் தயாரான நிலையில் உள்ள 36 ரஃபேல் ஜெட்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் தேவைப்படுவதாகக் கூறியிருந்தேன். எனக்கு மிகச் சிறந்த வரவேற்பளித்த பிரான்ஸ் அரசுக்கும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது பிரான்ஸில் இருப்பதற்கு மிக மகிழ்ச்சி கொள்கிறேன். ஐநா., பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி. அன்றாடத் தேவைக்கான அணுசக்தித் துறையில், ஜெய்தாபுர் அணு உலை தொடர்பில் இந்தியாவும் பிரான்ஸும் ஒப்பந்தம் செய்தன. இந்தியாவின் மிக முக்கிய மதிப்பு வாய்ந்த நட்பு நாடு பிரான்ஸ் என்றார் மோடி. நம் இரு நாடுகளும் ஒரேவித மதிப்புகள் கொள்கைகளைக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள் என்று கூறிய மோடி, உள்நாட்டிலேயே தயாரிப்போம் என்ற மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்ததாகக் கூறினார். அதிபர் பிரான்ஸ்வா ஹோலண்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரான்ஸும் இந்தியாவும் 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. முன்னதாக, 9 நாள் பயணமாக பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸ் நகரில் முதல் நிகழ்ச்சியாக யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர்… யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் உரை நிகழ்த்துவது எனக்குப் பெருமை அளிக்கிறது. இந்திய கலாசாரங்களைப் பாதுகாப்பதில் யுனெஸ்கோவின் பங்கு பாராட்டுக்குரியது. மக்களிடையே நம்பிக்கை விதைப்பதன் மூலமே நமது முன்னேற்றத்தை கணிக்க முடியும். ஒவ்வொரு குடிமகனின் சுதந்திரத்தையும் உரிமையையும் நாங்கள் பாதுகாப்போம். உலகில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் இறை நம்பிக்கை, கலாசாரம் போன்றவற்றுக்கு சமூகத்தில் சம உரிமை வழங்கப்பட வேண்டும். உலகின் பல இடங்களில் கலாசாரம் என்பதே பிரச்னைகளுக்கான காரணமாக உள்ளது. கலாசாரங்கள் பிரிவினைக்கு காரணமாகி விடக்கூடாது. மாறாக, மக்களுக்கிடையே உயரிய மரியாதையையும், புரிதலையும் உருவாக்குவதில் துணையிருக்க வேண்டும். பெருகி வரும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள நமது கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் மதங்கள் தொடர்பாக நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இன்றைய உலக முன்னேற்றத்திற்கு யுனெஸ்கோவின் பங்கு முக்கியமானதாகும். பருவகால மாற்றம் உலகின் பெரும் சவாலாக உள்ளது. இதனை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் இணைந்த கைகளின் அடிப்படையில்தான் ஒரு நாட்டின் பலம் தீர்மானிக்கப்படுகின்றது. நலிந்தவர்களுக்கு அதிகாரமளிப்பதில்தான் உண்மையான முன்னேற்றம் மதிப்பிடப்படுகின்றது. சுற்றுப்புறத் தூய்மை, நல்ல குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். புவிவெப்பமயமாதல் உலகளாவிய சவாலாகி வருகிறது. புவிவெப்பமயமாவதை தடுக்க ஒன்றிணைந்த செயல்திட்டம் தேவை. அடுத்த 7 ஆண்டுகளில் 175000 மெகாவாட் சுத்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நாம் எப்படி வாழ்கிறோம்? என்ற வாழ்க்கை முறைகளின் வெளிப்பாட்டின் மூலமாக மட்டுமே புவிவெப்பமயமாவதை குறைக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பு நிறைவேற முடியும் என்றார். முன்னதாக யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் யோகாசனம் தொடர்பான இணையதளத்தை துவக்கி வைத்தார் மோடி. பிரான்ஸ். ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு பாரீஸ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.