சந்திரபாபு நாயுடு… திருஷ்டிப் பொட்டு..! மோடியின் நக்கல்!

தனது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன் பறக்க விட்டதற்காக நாயுடுவுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இன்று ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார் பிரதமர் மோடி! அப்போது அவர், சந்திரபாபு முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், குண்டூரில் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்துக்கு மாபெரும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

குண்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, நம் நாட்டு சம்பிரதாயத்தில் திருஷ்டி படாமல் இருப்பதற்கு கருப்பு பொட்டு வைப்பார்கள். அதுபோல எங்கள் கட்சிக்கும் எனக்கும் எங்கள் ஆட்சிக்கும் திருஷ்டி ஏற்படாமலிருப்பதற்காக சந்திரபாபு நாயுடு கருப்பு பலூன் விட்டிருக்கிறார்! அவருக்கும் அவர் கட்சிக்கும் நான் நன்றி செலுத்துகிறேன் என்று பேசினார்.

மேலும், சந்திரபாபு நாயுடுவை விமர்சித்தும் பேசினார் மோடி. இவர் நாளைக்கு போட்டோக்கள் எடுப்பதற்காக, தில்லிக்குப் போக இருக்கிறார். தன்னுடன், பெரிய கூட்டத்தைக் கொண்டு போக இருக்கிறார். தன் கட்சி குறித்து தில்லிக்குப் பறை சாற்ற இந்த ஏற்பாடு செய்கிறார். ஆனால் பாஜக., கட்சி காரர்களோ, தங்கள் சொந்த செலவில் கட்சி வேலையில் ஈடுபடுகிறார்கள். அந்த நேரத்தில் ஆந்திர மக்களுடைய வரிப்பணத்தில் இவர் கட்சி வேலையில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி. நாளை பிப்.11ம் தேதி தில்லியில் தனது கட்சிக்காரர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்களுடன் பெரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் நாயுடு! அதைத்தான் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகர் உருவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை ஆந்திராவுக்கு வந்தார். இந்நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் நேற்று கூறிய போது, இது கருப்பு தினம். ஆந்திராவிற்கு அநீதி இழைத்த மோடி இங்கு வருவதில் எந்த நியாயமும் இல்லை. அவர் மாநிலங்கள் மற்றும் அரசியலமைப்பை பலவீனப்படுத்தி வருகிறார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருப்பது நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் காந்திய வழியில், மஞ்சள் மற்றும் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்த போகிறோம் என்றார்.

இதுகுறித்து ஆந்திர பாஜக., நிர்வாகிகள் கூறுகையில், இவர்களின் போராட்டம் பிரதமர் மோடியின் வருகையை வெற்றி அடையச் செய்யும். பிரதமரின் வருகையை தடுக்க முயற்சிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம் என்று கூறியிருந்தனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...