19/10/2019 8:18 AM
அரசியல் மதுரை சின்னப்பிள்ளை உள்பட பத்ம விருதுகள் பெற்ற மாமனிதர்களை நினைவு கூர்ந்த...

மதுரை சின்னப்பிள்ளை உள்பட பத்ம விருதுகள் பெற்ற மாமனிதர்களை நினைவு கூர்ந்த மோடி!

-

- Advertisment -
- Advertisement -

என் மனம்நிறை நாட்டுமக்களே, ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த முறையும் பத்ம விருதுகள் தொடர்பாக மக்களிடையே பெரும் உற்சாகம் காணப்படுகிறது. இன்று நாம் ஒரு புதிய இந்தியாவை நோக்கி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் அடிமட்டத்தில் யார் விருப்பு வெறுப்பற்ற நிலையில் பணியாற்றுகிறார்களோ, அவர்களுக்கு கௌரவம் அளிக்க நாம் விரும்புகிறோம்.

தங்கள் உழைப்பின் துணை கொண்டு பல்வேறு வகைகளில் மற்றவர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். உள்ளபடியே இவர்கள் தாம் உண்மையான கர்மயோகிகள். இவர்கள் மக்கள்சேவை, சமூகசேவை, இவை எல்லாவற்றையும் விட நாட்டின் சேவையை சுயநலமே இல்லாத முறையில் செய்கிறார்கள்.

பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் வேளையில், விருது பெற்றிருக்கும் இவர் யார் என்று மக்கள் வினவுவதை நீங்கள் கண்டிருக்கலாம். ஒரு வகையில் இதை நான் மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறேன் ஏனென்றால், இவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் ஆகியவற்றின் அட்டைகளில் காணப்படமாட்டார்கள். இவர்கள் பகட்டு நிறைந்த உலகத்திலிருந்து விலகி இருப்பவர்கள். ஆனால், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், தங்களுக்குப் பெயர் ஏற்பட வேண்டுமே என்ற கவலை கொஞ்சமும் இல்லாதவர்கள், களத்தில் இறங்கிப் பணியாற்றுவதில் நம்பிக்கை கொண்டவர்கள். யோக: கர்மாஸு கௌஷலம் என்ற கீதாவாக்கியத்தை அடியொற்றி இவர்கள் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட சிலரைப் பற்றி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒடிஷாவின் தைதாரி நாயக் பற்றி நீங்கள் கண்டிப்பாக அறிந்திருக்கலாம், அவரை canal man of Odisha என்று அழைப்பதில் காரணமில்லாமல் இல்லை. தைதாரி நாயக் அவர்கள் தனது கிராமத்தில் தனது கைகளாலேயே மலையை வெட்டி மூன்று கிலோமீட்டர் வரை கால்வாய் பாதையை அமைத்திருக்கிறார். தனது உழைப்பு காரணமாக நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவை ஏற்படுத்தினார். குஜராத்தின் அப்துல் கஃபூர் கத்ரி அவர்களை எடுத்துக் கொள்வோமே!! இவர் கட்ச் பகுதியின் பாரம்பரியமான ரோகன் ஓவிய வடிவத்திற்கு புத்துயிர் அளிக்கும் அற்புதமான செயலைப் புரிந்திருக்கிறார்.

இந்த அரியவகை ஓவிய முறையை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான வேலையை இவர் புரிந்திருக்கிறார். அப்துல் கஃபூர் வாயிலாக உருவாக்கப்பட்ட Tree of Life ஓவியப் படைப்பைத் தான் நான் அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பராக் ஓபாமா அவர்களுக்கு நினைவுப் பரிசாக அளித்தேன். பத்ம விருது பெற்றவர்களில் மராட்வாடாவைச் சேர்ந்த ஷப்பீர் சைய்யத் அவர்கள் பசுத்தாயின் சேவகனாக அறியப்படுபவர். அவர் எப்படிப்பட்ட வகையில் தனது வாழ்க்கை முழுவதையும் பசுத்தாயின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்பது மிகவும் அலாதியானது, அற்புதமானது.

மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவர் பாதிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரப் பங்களிப்பிற்கான முயற்சிகளை முதன்முறையாக தமிழ்நாட்டின் களஞ்சியம் இயக்கம் வாயிலாக மேற்கொண்டார். கூடவே, சமூக அடிப்படையில் குறுநிதியமைப்புக்களைத் தொடக்கினார்.

அமெரிக்காவின் Tao Porchon-Lynch பற்றிக் கேள்விப்பட்டு உங்களுக்கு இன்பமும் ஆச்சரியமும் ஒருசேர ஏற்படலாம். Lynch இன்று யோகக்கலையின் வாழும் நடமாடும் அமைப்பாக உருவெடுத்திருக்கிறார். நூறு ஆண்டுகள் ஆன போதிலும் கூட உலகம் முழுவதிலும் மக்களுக்கு யோகக்கலையை அவர் பயிற்றுவிக்கிறார், இதுவரை 1500 பேர்களை யோகப் பயிற்றுநர்களாக ஆக்கியிருக்கிறார். ஜார்க்கண்டின் Lady Tarzan என்ற பெயர் கொண்ட பிரசித்தமான பெண்மணியான ஜமுனா டுடூ (Tudu), மரக் கொள்ளையர்கள் மற்றும் நக்சல்களை எதிர்க்கும் சாகசம் நிறைந்த பணியைச் செய்திருக்கிறார், அவர் 50 ஹெக்டேர் காட்டை அழிப்பதைத் தடுத்ததோடு, பத்தாயிரம் பெண்களை ஒருங்கிணைத்து மரங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க உத்வேகம் அளித்தார்.

இந்த ஜமுனா அவர்களின் அயராத உழைப்பு காரணமாகவே இன்று கிராமவாசிகள் அனைவரும் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் 18 மரங்களையும், ஒவ்வொரு பெண்ணின் திருமணத்தின் போதும் 10 மரங்களையும் நடுகிறார்கள். குஜராத்தின் முக்தாபேன் பங்கஜ்குமார் தக்லீயின் கதை உங்கள் மனங்களில் உத்வேகத்தை நிறைத்து விடும், மாற்றுத் திறனாளியாக இருந்தும் கூட, இவர் பெண்களின் மேம்பாட்டிற்காக செய்திருக்கும் பணிகளைப் பார்க்கும் வேளையில், இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் கிடைப்பது மிகவும் கடினம் என்றே நினைக்கத் தோன்றும். சக்ஷு மஹிலா சேவாகுஞ்ஜ் என்ற பெயருடைய அமைப்பை நிறுவி, பார்வைத்திறன் இல்லாத குழந்தைகளை சுயசார்புடையவர்களாக ஆக்கும் பவித்திரமான பணியில் இவர் ஈடுபட்டு வருகிறார். பிஹாரின் முஸஃபர்புரைச் சேர்ந்த விவசாயியான ராஜ்குமாரி தேவியின் கதை மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது.

பெண்களின் அதிகாரப்பங்களிப்பு மற்றும் விவசாயத்தை இலாபகரமானதாக ஆக்க இவர் ஒரு எடுத்துக்காட்டை முன்வைத்தார். விவசாயியான இந்தப் பெண்மணி தனது பகுதியைச் சேர்ந்த 300 பெண்களை ஒரு சுய உதவிக் குழுவோடு இணைத்தார், பொருளாதார ரீதியாக தற்சார்பு உடையவர்களாக ஆவதற்கு உத்வேகம் அளித்தார். அவர் கிராமத்தின் பெண்களுக்கு விவசாயத்தோடு கூடவே, பிற வேலைவாய்ப்புகளிலும் பயிற்சி அளித்தார். குறிப்பாக அவர், விவசாயத்தோடு தொழில்நுட்பத்தை இணைத்தார். மக்களே! இந்த ஆண்டு தான் பத்ம விருதுகள் பெற்றவர்களில் 12 விவசாயிகள் இருக்கிறார்கள் என்பது முதன்முறையாக இருக்கலாம்.

பொதுவாக, விவசாய உலகோடு தொடர்புடையவர்களில் குறைவானவர்களுக்குத் தான், மேலும் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் இன்னும் குறைவாகத் தான் பத்மஸ்ரீ பட்டியலில் இடம் பிடிப்பார்கள். ஆனால் இந்த முறை பட்டியலைப் பார்க்கும் போது உள்ளபடியே மாறிவரும் இந்தியாவின் உயிரோவியமாக இது காட்சியளிக்கிறது. விவசாயிகளுக்குப் புதிய இந்தியாவில் எத்தனை மகத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை இது பளிச்செனத் துலக்கிக் காட்டுகிறது.

மனதின் குரல் – 53வது பகுதி
24.2.2019 அன்று வானொலியில் ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம்
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: