எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் இன்று உங்கள் அனைவரிடமும் இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இதை கடந்த சில நாட்களாக நான் அனுபவித்து வருகிறேன்.

இப்போதெல்லாம் நான் நாட்டில் எங்கே சென்றாலும், ஆயுஷ்மான் பாரதம் திட்டம் அதாவது பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டத்தின் சில பயனாளிகளைச் சந்திப்பது என்ற முயற்சியில் ஈடுபடுகிறேன். சிலரோடு கலந்து பேசும் வாய்ப்பு கிட்டுகிறது. தனியாக இருக்கும் ஒரு தாயிடம் பணம் இல்லாத காரணத்தால் தனக்கும் தன் குழந்தைக்கும் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியாத நிலை. இந்தத் திட்டம் காரணமாக அவளால் தனக்கும் சரி, தனது குழந்தைக்கும் சரி, வைத்தியம் பார்த்துக் கொள்ள முடிந்ததோடு, தாய் – சேய் இருவரும் நலமடைந்தார்கள். குடும்பத் தலைவன் கூலித்தொழில் செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வரும் போது, விபத்துக்கு இரையாகி அவனால் அவனது வேலையைத் தொடர முடியாத அவலநிலை. இந்தத் திட்டம் காரணமாக அவன் பயனடைந்து மீண்டும் உடல் நலமடைந்தான், புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினான்.

சகோதர சகோதரிகளே! கடந்த ஐந்து மாதங்களாக சுமார் 12 இலட்சம் ஏழைக் குடும்பங்கள் இந்தத்திட்டத்தால் பயனடைந்திருக்கின்றன. ஏழையின் வாழ்க்கையில் எத்தனை பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இதனால் என்னால் கண்கூடாகக் காணமுடிகிறது. பணத்தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற முடியாத ஏழை மனிதன் பற்றி உங்களுக்கும் தெரிய வரலாம். அப்படி உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் அவர்களுக்கு இந்தத்திட்டம் பற்றி அவசியம் விளக்கிச் சொல்லுங்கள். இந்தத்திட்டம் அப்படிப்பட்ட அனைத்து ஏழைகளுக்கும் சொந்தமானது.

என் மனதில் வீற்றிருக்கும் என் நாட்டுமக்களே! பள்ளிக்கூடங்களில் தேர்வுக்காலங்கள் தொடங்கவிருக்கின்றன. நாடு முழுவதிலும் பல்வேறு கல்வி வாரியங்கள் அடுத்த சில வாரங்களில் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வு செய்ல்பாடுகளைத் தொடங்கிவிடும். தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் நான் என் தரப்பிலிருந்து மனம்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில நாட்கள் முன்பாக தில்லியில் பரீக்ஷா பே சர்ச்சா, அதாவது தேர்வுகள் தொடர்பான உரையாடல் என்ற ஒரு பெரிய நிகழ்ச்சி டவுன் ஹாலில் நடைபெற்றது. இந்த டவுன் ஹால் நிகழ்ச்சியில் முதன்முதலாக தொழில்நுட்பத்தின் வாயிலாக, நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான மாணவர்களோடும், அவர்களின் பெற்றோரோடும், ஆசிரியர்களோடும் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தேர்வுகள் தொடர்பான உரையாடல் நிகழ்ச்சியின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், தேர்வுகளோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் குறித்து தங்கு தடையே இல்லாமல் விவாதங்கள் நடைபெறுவது தான். மாணவர்களுக்கு நிச்ச்யமாகப் பயனளிக்கும் வகையிலான பல கோணங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. அனைத்து மாணவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும், யூ ட்யூபில் இந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவைக் காணலாம்; வரவிருக்கும் தேர்வுகள் குறித்து அனைத்து தேர்வுப் போராளிகளுக்கும் என் ஏராளமான நல்வாழ்த்துக்கள்!

பாரதம் பற்றிய பேச்சு என்று வந்தால், பண்டிகைகள் பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா? முடியாதில்லையா? மகத்துவமே இல்லாத ஒரு நாள் அல்லது பண்டிகையே இல்லாத காலம் என்ற ஒரு நாளே நம் நாட்டில் இருக்க முடியாது என்ற வகையில் தான் நமது நாட்டிலே அனைத்து நாட்களையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கிறோம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த கலாச்சாரம், மரபுவழி நம்மிடத்தில் இருக்கிறது. சில நாட்கள் கழித்து மஹாசிவராத்திரி புனித நாள் வரவிருக்கிறது, இந்த முறை சிவராத்திரி திங்கட்கிழமையன்று வருகிறது எனும் போது ஒரு சிறப்பான மகத்துவம் நம் மனங்களிலே கொலுவீற்று மணம் பரப்புகிறது. இந்தப் புனிதமான சிவராத்திரித் திருநாளை ஒட்டி உங்கள் அனைவருக்கும் ஏராளமான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே! சில நாட்கள் முன்பாக நான் காசிக்குச் சென்றிருந்தேன். அங்கே மாற்றுத்திறன் படைத்த சகோதர சகோதரிகள் சிலருடன் சற்று நேரத்தை கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடன் பல விஷயங்கள் தொடர்பாகப் பேசமுடிந்தது, அவர்களின் தன்னம்பிக்கை உண்மையிலேயே தாக்கம் ஏற்படுத்துவதாக, உத்வேகம் அளிப்பதாக இருந்தது.

உரையாடிக் கொண்டிருக்கும் போது கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர், தான் ஒரு மேடைக்கலைஞர் என்று கூறினார். கேளிக்கை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்பவர் என்று தன்னை அறிமுகப்படுத்திய போது, நீங்கள் யார் போலெல்லாம் பேசுவீர்கள் என்று கேட்டேன். அவர் நான் பிரதம மந்திரியைப் போல பேசி மிமிக்ரி செய்வேன் என்றார். உடனே நான், சரி கொஞ்சம் செய்து காட்டுங்களேன் என்ற போது, எனக்கு சுகமான ஒரு ஆச்சரியம் காத்திருந்தது,

மனதின் குரலில் எப்படி நான் பேசுவேனோ, அதைப் போலவே அவர் பேசிக் காட்டினார், மனதின் குரலை மிமிக்ரி வாயிலாகச் செய்து காட்டினார். மனதின் குரலை மக்கள் கேட்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் அதை நினைவில் கொள்ளவும் செய்கிறார்கள் என்பதை அறிந்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களின் சக்தியைக் கண்டு நான் மிகவும் அசந்து போனேன், அவர்கள் பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தினார்கள்.

என் கனிவுநிறை நாட்டுமக்களே! மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக உங்கள் அனைவரோடும் இணைவது எனக்கு அலாதியான அனுபவத்தை அளித்து வந்திருக்கிறது. வானொலி வாயிலாக ஒரு வகையில் கோடிக்கணக்கான குடும்பங்களோடு நான் ஒவ்வொரு மாதமும் கலந்து உறவாடி வருகிறேன். பலமுறை உங்களோடு உரையாடும் போதும், நீங்கள் எழுதிய கடிதங்களைப் படிக்கும் போதும், உங்கள் தொலைபேசி அழைப்புக்களைக் கேட்கும் போதும், நீங்கள் என்னை உங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதுகிறீர்கள் என்ற எண்ணம் என் மனதில் மேலோங்குகிறது. இந்த உணர்வு என் மனதிலே சுகமான ஒரு அனுபவத்தைத் துளிர்க்கச் செய்கிறது, சுகந்தம் கமழ்கிறது!.

நண்பர்களே! தேர்தல்கள் என்பவை ஜனநாயகத்தின் மிகப் பெரிய கொண்டாட்டங்கள். அடுத்த இரண்டு மாதங்கள் நாமனைவரும் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருப்போம். நானுமே கூட இந்தத் தேர்தலில் ஒரு வேட்பாளராக நிற்கிறேன். ஆரோக்கியமான ஜனநாயக பாரம்பரியத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில், அடுத்த மனதின் குரல் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று இடம் பெறும். அதாவது மார்ச்-ஏப்ரல்-மே இந்த மூன்று மாதங்களின் எனது உணர்வுகள் அனைத்தையும், தேர்தல்களுக்குப் பிறகு ஒரு புதிய நம்பிக்கையோடு, உங்கள் ஆசிகள் என்ற பலத்தோடு, மீண்டும் ஒருமுறை மனதின் குரல் வாயிலாக நமது உரையாடல் என்ற தொடரைத் தொடக்குவேன்,

உங்கள் மனதின் குரலோடு பல ஆண்டுகள் இணைந்து பயணிப்பேன். மீண்டும் ஒருமுறை மிகுந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

மனதின் குரல் – 53வது பகுதி
24.2.2019 அன்று வானொலியில் ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம்
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...