பாகிஸ்தான் மீது போர் இல்லை..! அவர்கள் செய்யத் தவறியதை நாம் செய்தோம்!

292

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப் பட்டது. ஆனால் இது போர் முன்னேற்பாடோ போரோ அல்ல! அவர்கள் செய்யத் தவறியதை நாம் செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே.

இந்தியா விமானப்படை விமானங்கள் இன்று காலை பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இது குறித்து விளக்கம் அளித்தார் வெளியுறவு துறை செயலர்  விஜய் கோகலே.

அப்போது அவர், இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது! ஆனால் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் மிகப் பெரும் பயங்கரவாத பயிற்சி முகாம் பாலாகோட்டில் உள்ளது. அதனை ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரின் உறவினர் மௌலானா யூசுப் அசார் நடத்தி வருகிறார்.

கடந்த இரு தலைமுறைகளாக பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பு அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புதான் கடந்த 2001ம் வருட தொடர் தாக்குதல்களுக்கும், நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்களுக்கும் 2016 ஜனவரியில் பதான்கோட்டில் நடந்த தாக்குதல்களுக்கும் என பல தாக்குதல்களுக்கு காரணமான அமைப்பு.

நாங்கள் அதனால் ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் மீது தாக்குதல் தொடுத்தோம். மேலும் விவரங்களுக்கு காத்திருக்கிறோம் என்று வெளியுறவுத் துறை செயலர் கூறினார்

வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே மேலும் கூறியபோது இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தொடர்பு கொண்டிருப்பது நன்றாகத் தெரியும்! அது தானாகவே தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்று இருப்பதும் வெளிப்படையாக தெரியும்! மேலும் பாகிஸ்தானில் அந்த அமைப்புக்கு உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அவற்றின் இருப்பிடங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் நமக்கு தெரியும்! அவற்றை பாகிஸ்தானிடம் கொடுத்தும் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் அதன்மீது எடுக்கவில்லை.

மேலும் ஜெய்ஷ்-இ-மொஹம்மத் அமைப்பு மேலும் ஒரு மோசமான தாக்குதலை இந்தியாவில் தொடுப்பதற்கு தீர்மானித்திருந்தது! தற்கொலைப்படை பயங்கரவாதிகளை தயார் செய்து அனுப்புவதற்கு காத்திருந்தது.

இந்தத் தகவல் நமக்கு கிடைத்தது. எனவே நமது மண்ணை பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டி வந்தது என்று வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...