தாஜ்மஹாலை சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி மீண்டும் மனு

ஆக்ரா: தாஜ்மஹாலை தேஜோமஹாலயா என்ற சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி, ஆக்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மனுதாரர்களில் ஒருவரான ராஜேஷ் குல சிரேஷ்டா தெரிவித்தபோது, 17ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தாஜ்மஹாலை ஹிந்துக் கோயிலாக அறிவிக்கக் கோரியும், அந்தக் கட்டடத்தில் மூடப்பட்டுள்ள பகுதிகளைத் திறந்து, ஹிந்துக்களின் மதச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்குமாறும் ஆக்ரா மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ளூர் வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளோம். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இது தொடர்பாக அடுத்த மாதம் 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தொல்லியல் துறை, மத்திய உள்துறை, மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் என்று கூறினார்.