ராய்ப்புர்: சட்டீஸ்கரில் உள்ள கான்கெர் மாவட்டத்தில், இரும்புத் தாது ஏற்றி வந்த 18 டிரக்குகளை இன்று காலை நக்சலைட்கள் தீயிட்டுக் கொளுத்தினர். 24 மணி நேரத்தில் அங்கே நிகழ்ந்த அடுத்த தாக்குதல் இது. முன்னதாக, சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சனிக்கிழமை நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 7 போலீஸார் பலியாகினர். சுமார் 12 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சுக்மாவில் இருந்து 265 கி.மீ. தொலைவில் உள்ளது கான்கெர். அடர்ந்த வனப்பகுதி நிறைந்த சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் மிக்க பகுதி. சனிக்கிழமை நேற்று மதியம் மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் போலம்பள்ளி- பிட்மெல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது அங்கே பதுங்கியிருந்த 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் போலீஸாரை சுற்றி வளைத்து துப்பாக்கிகளால் சுட்டனர். போலீஸாரும் பதிலுக்கு சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற 2 மணி நேர துப்பாக்கிச் சண்டையில் 7 போலீஸார் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து, மாநில காவல்துறை கூடுதல் இயக்குநரும் சிறப்புப் படையின் தலைவருமான ஆர்.கே.விஜ் தெரிவித்தார். காயம் அடைந்த வீரர்கள் இரண்டு ஹெலிகாப்டர்களில் ஜக்தால்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், போலீஸாரிடம் இருந்து ஆயுதங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் கமாண்டர் சங்கர் ராவ், தலைமை கான்ஸ்டபிள்கள் ரோஹித் சோரி, மனோஜ் பாகல், மோகன், கான்ஸ்டபிள்கள் ராஜ்குமார், கிரண் தேஷ்முக், ராஜ்மன் நேத்தம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், மாவோயிஸ்ட் உள்ளூர் தலைவர்கள் சோனு, நாகேஷ், ஹித்மா ஆகியோர் தலைமையிலான தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத் தியுள்ளனர்.
சட்டீஸ்கரில் 18 டிரக்குகள் எரிப்பு: நக்ஸல்களின் தொடர் வெறிச்செயல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari