செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு!

சித்தூர்: செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்ட தமிழக முன்னாள் எம்பி சவுந்தரராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திர மாநில உயர் போலீஸ் அதிகாரிகளுடன் செம்மரக் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திர மாநில வனப் பகுதிகளில் இருந்து செம்மரக் கட்டைகள் வெட்டப்பட்டு, வெளி நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. செம்மரக் கட்டைகள் அவ்வப்போது பிடிபடுவதும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும், அவர்கள் பின்னர் ஜாமீனில் வெளிவருவதும் தொடர்கதையாகத்தான் உள்ளது. இந்நிலையில் ஏப்..7ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தி சுட்டுக் கொன்றனர். இதை அடுத்து, செம்மரக் கடத்தலில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளைப் பிடிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், தில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வங்கதேசம், மியான்மர் நாடுகளிலும் இந்த செம்மரக் கடத்தலில் பலருக்கு தொடர்புள்ளது தெரியவந்தது. இதனிடையே ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள லட்சுமணன், சினிமா தயாரிப்பாளர் மஸ்தான் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் மொரீஷியஸ் நாட்டில் பதுங்கியிருந்த கெங்கிரெட்டி கைது செய்யப்பட்டார். இந்தக் கடத்தலில் தமிழக முன்னாள் எம்பி சவுந்தரராஜன், சரவணன், குமார் உட்பட பலரது தொடர்பு குறித்தும் தெரிய வந்ததையடுத்து ஆந்திர போலீசார் பூடானில் சீன எல்லையில் பச்சிமாபெங்கா என்ற இடத்தில் இருந்த முன்னாள் எம்பி சவுந்தரராஜனைக் கைது செய்து, அங்கு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். அடுத்து, சென்னை செங்குன்றத்தில் பதுங்கியிருந்த சரவணன், குமார் ஆகிய 2 பேரைக் கைது செய்து, சவுந்தரராஜனின் குடோனில் இருந்து 5 டன் செம்மரங்களையும் கைப்பற்றினர். பூடானில் பிடிபட்ட சவுந்தரராஜன் பின்னர் சித்தூர் கொண்டு வரப்பட்டார். அதை அடுத்து, சவுந்தரராஜன் உட்பட சரவணன், குமார் ஆகிய 3 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் இந்த விவகாரத்தில் ஆந்திர போலீஸ் உயர்அதிகாரிகளின் தொடர்பு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சவுந்தரராஜனை மட்டும் சித்தூர் 3ஆவது கூடுதல் மாவட்ட முன்சீப் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதை அடுத்து, அவரை மே.7ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.