நுகர்வோர் வாங்கிய பொருளை எடுத்துச் செல்ல கேரி பேக் கொடுத்து அனுப்ப வேண்டியது ஒரு நிறுவனத்தின் அடிப்படைக் கடமை என்று கூறியுள்ளது நுகர்வோர் தீர்ப்பாயம்.

காலணிகள் வாங்கிய வாடிக்கையாளரிடம் கேரி பேக்கிற்கு 3 ரூபாய் வசூலித்த பாட்டா நிறுவனத்துக்கு ரூ.9,000 அபராதம் விதித்து நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

சண்டிகரில் வசிப்பவர் தினேஷ் பிரசாத் ராதுரி. இவர் அங்குள்ள பாட்டா ஷோரூமில் ரூ.399க்கு காலணி வாங்கியுள்ளார். அதை எடுத்துச் செல்ல பேப்பர் கேரி பேக் கொடுத்த கடை ஊழியர்கள், அதற்கும் சேர்த்து ₹402க்கு பில் கொடுத்துள்ளனர்.

இதனால் கோபமும், மன உளைச்சலும் அடைந்த தினேஷ் பிரசாத், சண்டிகரில் உள்ள நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில் காலணியை எடுத்துச் செல்ல கேரி பேக்கிற்கு பாட்டா ஊழியர்கள் 3 ரூபாய்  வசூல் செய்துள்ளனர். அதில் பாட்டா நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பெயரைப் பொறித்து விளம்பரப் படுத்தப்பட்ட கேரி பேக்கிற்கு என்னிடம் எப்படி பணம் வசூல் செய்யலாம்?. எனவே, கேரி பேக்கிற்கு வசூல் செய்த பணத்தை திருப்பித் தரவேண்டும். வழக்குச் செலவு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில் … பேப்பர் கேரி பேக் வழங்க கட்டாயமாக பணம் வசூல் செய்தது தவறு. இது அந்த நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டைத்தான் காட்டுகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கேரி பேக் வழங்க வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை.

எனவே, பாட்டா நிறுவனம் தினேஷ் பிரசாத் ராதுரியிடம் கேரி பேக் வழங்க வசூலித்த 3 ரூபாயை திருப்பித் தர வேண்டும். அதோடு வழக்கு செலவாக ரூ.1,000 மன உளைச்சலுக்கு ரூ.3,000 மற்றும் தீர்ப்பாயத்தின் சட்ட உதவி கணக்கில் ரூ.5,000 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...