உத்தர பிரதேசம் மாநிலம் வாராணசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.
வாராணசியில் பிரதமர் மோடி இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உ.பி., மாநிலம் வாராணசி தொகுதியில் போட்டியிட்ட மோடி வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.
இரண்டாவது முறையாக வாராணசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக வாராணசி வந்திருந்த அவர், நேற்று நடந்த பிரமாண்ட பேரணியிலும் கலந்து கொண்டார். திறந்த வாகனத்தில் சென்ற அவரை ஆதரவாளர்களும் பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில் வாராணசியில் இன்று முற்பகல், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஆலோசனைக்கூட்டமும் நடைபெற்றது. அப்போது மோடி பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட மூத்தோரின் பாதங்களில் குனிந்து தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.




