முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்! அப்பலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தரப்புகளிலும் விசாரணை நடைபெற்று வந்தது. சிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப் பட்டது.
இந்நிலையில் அப்போலோ மருத்துவா்கள் நேரில் ஆஜராக ஆணையம் சாா்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மருத்துவா்களிடம் விசாரணை நடத்த தனியாக 21 மருத்துவா்கள் சிறப்பு நிபுணா்கள் கொண்ட குழுமை அமைக்க மருத்துவமனை சாா்பில் நிபந்தனை வைக்கப்பட்டது. இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் அப்பலோ மருத்துவமனை சாா்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்குமாறு அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைத்தது. ஆனால் 90 சதவீத விசாரணை முடிவடைந்த நிலையில் மருத்துவா் குழுவை அமைக்க முடியாது என்று ஆணையம் கூறியது. இதை ஏற்ற உயர் நீதிமன்றம் இந்த விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என்றது.
இதை அடுத்து அப்பலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுவில், மருத்துவமனை சாா்பில் ஏற்கெனவே ஆறுமுகசாமி ஆணையத்தில் பல ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆவணங்கள் முறையாகப் புரிந்து கொள்ளப்படாமல் இருந்ததால், 21 மருத்துவா்கள், உயா் அதிகாாிகளை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கோரினோம். எனவே மருத்துவா் குழுவை அமைக்கும் வரை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப் பட்டது.
அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்தின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது !





