வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது வேட்புமனுவில் அவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 2.51 கோடி என குறிப்பிடப் பட்டுள்ளது.
1979ம் ஆண்டில் தில்லி பல்லைக்கழகத்தில் இளங்கலை,
1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 1.41 கோடி ஆகவும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 1.1 கோடியாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தாம் பெற்ற ஆண்டு வருமானத்தையும் வேட்புமனுவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அதன்படி 2018ல் ரூ. 19.92 லட்சம், 2017ல் ரூ. 14.59 லட்சம், 2016ல் ரூ. 19.23 லட்சம், 2015ல் ரூ. 8.58 லட்சம், 2014ல் ரூ. 9.69 லட்சம் என தமக்கு ஆண்டு வருமானம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பதவியில் இருக்கும் தமக்கு வழங்கப் படும் மாத சம்பளம் மட்டுமே அவருடைய அதிகபட்ச ஊதியமாக இருந்துள்ளது.
தன் கையிருப்பில் ரூ. 38,750 பணமும், வங்கிக் கணக்கில் ரூ. 4.143 பணமும் இருப்பதாகவும், எஸ்பிஐ வங்கியில் வைப்பு நிதியில் ரூ. 1.27 கோடி பணம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆயுள் காப்பீடு முதன்மைத் தொகை ரூ. 1.90 லட்சம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிடம் சுமார் 45 கிராம் தங்கம் உள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ. 1.13 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் பெயரில் சொந்தமாக நிலங்கள். வணிகக் கட்டிடங்கள் இல்லை. ஒரே அசையா சொத்து குஜராத் காந்திநகர் பகுதியில் உள்ள சொந்த வீடு மட்டுமே. அதிலும் அவருக்கு 25 சதவீத உரிமை மட்டுமே உள்ளது. அந்த வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.10 கோடி.
மோடியின் பெயரில் வங்கி கடன் எதுவும் இல்லை.
அவர் யாருக்கும் பணம் தர வேண்டியதும் இல்லை.
பிரதமராக பதவியேற்ற பின் தன் பெயரில் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் புதியதாக பதிவு செய்யப்படவில்லை.
பிரதமரான பின் தங்கத்திலான பொருட்கள் எதையும் வாங்கவில்லை.
இந்திய நாட்டு சட்டவிதிகளின் படி, பிரதமராக பதவி வகிக்கும் ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ. 12.2 லட்சம்.
பிரதமர் மோடியின் மாத வருமானம் ரூ. 1.60 லட்சம்.
முன்னதாக, குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த போது அவருடைய மாத வருமானம் ரூ. 2.10 லட்சமாக இருந்தது. முதல்வர் பணிக்காக அவர் பெற்ற ஊதியம் அனைத்தையும் தனது தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு அவர் வழங்கியிருந்தார்.


