தமிழகத்தில் புயல் அபாயமா? சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

இந்தியா சென்னை தமிழகம்

balachandran - 2026

தற்போது உருவாகியுள்ள ஃபானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு எதுவும் இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தமிழகத்தில் புயல் கரையைக் கடக்க வாய்ப்பு இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், ”ஃபானி புயல் தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சுமார் 1,050 கிமீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. அது இன்று இரவுக்குள் தீவிரப் புயலாகவும், ஏப்ரல் 29 அன்று அதிதீவிரப் புயலாகவும் மாறும்!

புயல் வடக்கு மற்றும் வடமேற்கில் நகர்ந்து வருகிறது. ஏப்ரல் 30, மே 1 அன்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் 300 கி.மீ., தொலைவு வரை நிலைகொள்ளும். பின்னர் அது வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும். இதனால், தமிழக கடற்கரை பகுதிக்கு பாதிப்பு இல்லை.

புயல், சென்னையிலிருந்து 300 கி.மீ., தொலைவில் நிலைகொள்ளும் போது, சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது,” என்றார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பால், தமிழக உள் மாவட்டங்களுக்கு மழை கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றமும், வட தமிழக மக்களுக்கு புயல் அபாயம் நீங்கியது என்பதால் அது மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.