மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.,!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

masood azhar - 2026

புல்வாமா தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதி மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்! சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அவரது பெயரும் இணைந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத், இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டித் தனமான தாக்குதல், உலகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.

இருப்பினும், பாகிஸ்தானுடன் சீனாவுக்கு உள்ள உறவுகளின் அடிப்படையில், சீன அரசு எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக இந்தியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. ஆயினும், தொடர்ந்து சீனாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை இந்தியாவின் கோரிக்கையை ஏற்றதுடன், சீனாவும் அதே நிலையை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தின. இதனால் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க சீனாவும் ஒப்புக் கொண்டது. இதை அடுத்து ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்து இன்று அறிவிப்பு வெளியிட்டது.

இதன் மூலம் சர்வதேச அளவில் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மௌலானா மசூத் அசார் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது, பாகிஸ்தானில் இருந்து இயக்கத்தை நடத்துவது உள்ளிட்ட செயல்கள் தடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், மௌலானா மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மௌலானா மசூத் அசாா் பிற நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படும். அசாா் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பொிய வெற்றி என்று கூறப் படுகிறது.

இது குறித்து சையத் அக்பருத்தீன் தனது டிவிட்டர் பதிவில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், இதற்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் பயங்கரவாதத்தின் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற ஹாஷ்டாக்குடனும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.