ஒடிசாவில் நீட் தேர்வு தேதி அறிவிப்பு: ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதத்தால் எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

இந்தியா கல்வி சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

11 June28 Prakash Javadeker - 2026ஒடிசா மாநிலத்தில் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, மே 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மே 5ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வுகள் நடைபெற்றன. ஆனால் ஃபானி புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் வரும் மே 20 ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு நடைபெறும் எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும், திருத்தியமைக்கப்பட்ட தேர்வு எழுதவுள்ளோரின் பட்டியலானது விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது. வழக்கமாக ஹம்பி எக்ஸ்பிரஸ் பெங்களூருக்கு காலை 7 மணிக்கு வரும். ஆனால் இடையில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, ஹம்பி எக்ஸ்பிரஸ் காலதாமதமாக மதியம் 2.40க்கே பெங்களூரு வந்தது. இதனால் அதில் பயணித்த மாணவர்கள் தேர்வு எழுத இயலாமல் போனது.

இதை அடுத்து அந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் எழுதப்படும் என தென்மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி விஜயா தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியும் கூறியிருந்தார்.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தன் டிவிட்டர் பதிவில், “கர்நாடகா மாநிலத்தில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.