உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக மகளிர் அமைப்புகள் என்ற போர்வையில் அரசியல் ரீதியான சிலர் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தில் பணி புரிந்த முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இந்தப் புகார், நீதிமன்ற உள் விசாரணையாக நடந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழு முன்னர் இது விசாரிக்கப் பட்டது. இந்த விசாரணையின் முடிவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை என்றும், இதன் பேரில் நடவடிக்கை எதுவும் எடுக்க அவசியமில்லை என்றும் கூறி, இந்த புகாரில் உண்மையில்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப் படுவதாக அறிவிக்கப் பட்டது.
மேலும், விசாரணைக் குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என்றும் கூறினர் நீதிபதிகள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புகார் கொடுத்த பெண், தான் இதை எதிர்பார்த்ததாகவும், நீதியின் மீதான நம்பிக்கை அற்றுப் போய்விட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் புகாரை ஏற்று, மூன்று நபர் நீதிபதிகளின் விசாரணைக் குழு அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சிலர் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் முன்னர் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.
இதற்கு மகளிர் அமைப்புகள் கூறிய காரணம், இந்த வழக்கு விசாரணையின் போது, இந்தக் குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, புகார் அளித்த பெண், விசாரணைக் குழுவில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞரும் எவரும் ஆஜராகவில்லை. எனவே, தலைமை நீதிபதியிடம் விசாரித்துவிட்டு, அப்படியே தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது என்று குறை கூறினர்.
முன்னதாக சிறிய அளவில் உச்ச நீதிமன்றம் முன் போராட்டம் நடந்ததையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்க அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.




