புதுச்சேரி மாநில அமைச்சரவை முடிவை அமல்படுத்த தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்! வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி அமைச்சரவை முடிவை அமல்படுத்த 10 நாட்கள் தடை விதித்துள்ளது.
புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் கூட உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கோரினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும், அதே நேரத்தில் 7 ம் தேதி கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்று ஆலோசனை சொல்லலாம் என்றும், திட்டங்களை ஆளுநரே செயல்படுத்த கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கில் முதல்வரையும் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொடர்ந்து வழக்கை வரும் 21ம் தேதி ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!
இந்நிலையில் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், நிதி தொடர்பான முடிவுகளை அமல்படுத்த மட்டுமே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார் நாராயணசாமி!
புதுச்சேரி நிர்வாகத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என்றும் ஆளுநர் கிரண்பேடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்தனர். தொடர்ந்து புதுச்சேரி அமைச்சரவை கூட்ட முடிவுகளை 10 நாளுக்கு அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் 7-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, புதுவை அரசின் அதிகாரங்களில் துணைநிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, கிரண்பேடி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
புதுவை அரசின் அன்றாட நிர்வாக விவகாரங்களில் ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதாக, முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், கிரண்பேடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் அதிகாரத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என அண்மையில் உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து ஆளுநர் கிரண்பேடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதில்தான், மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.




