புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை தொடங்குகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது. 2012 பிப்.2-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் 2ஜி அலைக்கற்றை தொடர்பான 122 உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை, சிபிஐ தரப்பில் 154 சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். குற்றம் சாற்றப்பட்டோர் தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் தொடங்குகிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு தரப்பு அரசியல் கட்சிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், 2ஜி வழக்கும் பெரிய எதிர்பார்ப்பை தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே ஏற்படுத்தியுள்ளது.
Popular Categories