திருப்பதி:திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி சோதனை சாவடியில் சோதனைக்கு சேர்ந்த ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய தேவஸ்தான விஜிலென்ஸ் துறை ஊழியர்கள்.
செங்கல்பட்டை சேர்ந்த 45 பேர் திருப்பதி மலையில் நாளை நடை பெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருப்பதி மலைக்கு வந்திருந்தனர்.அவர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் போது மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் அவர்களது உடைமைகள்,பைகள் ஆகியவற்றை தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் சோதனை செய்தனர்.
அப்போது செங்கல்பட்டு பக்தர் ஒருவரின் பையில் குட்கா பாக்கெட் ஒன்று இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கும் விஜிலென்ஸ் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது விஜிலென்ஸ் ஊழியர் அந்த பக்தரை மரியாதை குறைவாக பேசினார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் விஜிலென்ஸ் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அந்த பக்தர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
விஜிலன்ஸ் ஊழியர்களின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்த செங்கல்பட்டை சேர்ந்த பெண் பக்தர்கள் அவரை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டு மன்றாடினர். ஆனாலும் விஜிலென்ஸ் ஊழியர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.
தற்போது தாக்குதலுக்கு உள்ளான பக்தரை தங்கள் கட்டுப்பாட்டில் விஜிலன்ஸ் துறையினர் வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பக்தர்கள் தாக்கிய விஜிலன்ஸ் ஊழியர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பதி மலையில் பான் பராக், குட்கா,புகையிலை பொருட்கள், பீடி, சீக்ரெட், மது, மாமிசம் ஆகியவற்றை பயன்படுத்த தடை அமலில் உள்ளது. ஆனாலும் பக்தர்கள் சிலர் திருப்பதி மலையில் தடை அமலில் இருப்பது தெரியாமல் அவற்றைக் கொண்டு வருகின்றனர்.
மலையடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் சோதனை நடத்தும்போது பக்தர்களிடம் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் அவற்றை கைப்பற்றுவது மட்டுமே நடைமுறையில் உள்ள வழக்கம்.
ஆனால் இந்த சம்பவத்தில் விஜிலென்ஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பக்தர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனங்கள் வலுத்துள்ளன.




