பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இருக்கிறது என்று ஒரு வதந்தியை பற்ற வைத்துள்ளது பாகிஸ்தான் ஊடகம். அதற்கு ஹிந்துஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத ஆதரவும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று கூறி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டது இந்தியா. இருப்பினும், பாகிஸ்தான் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தும்படி கோரிக்கை வைத்து வருகிறது; அதை பாரத அரசு நிராகரித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ஊடகம் திடீர் வதந்தியைக் கிளப்பி விட்டது. பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் எக்ஸ்பிரஸ் டிரிபியுன் பத்திரிகையில் ஹிந்துஸ்தான் பிரதமர் மோடியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்று கூறப் பட்டுள்ளது.
மேலும், பிராந்திய நலனுக்காக பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளுடன் சுமுக உறவை வைத்துக்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தச் செய்தியை பாரத அரசு மறுத்துள்ளது. இந்தச் செய்திக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், பாகிஸ்தான் ஊடகத்தில் வெளியான செய்தியில் உண்மையில்லை. பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கு பிரதமர் மோடியும், ஜெய்சங்கரும் பரஸ்பரம் வாழ்த்து மட்டுமே தெரிவித்துள்ளனர் என்று விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராவீஷ் குமார் செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவித்த போது…
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் பிரதமர் மோடிக்கும், ஜெய்சங்கருக்கும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அவர்களின் செய்தியில் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் கூட்டுறவு, ஒத்துழைப்பை இந்தியா பராமரிக்க விரும்புகிறது என குறிப்பிடப் பட்டது.
பிரதமர் மோடி கொடுத்த பதிலில் நம்பிக்கையை ஏற்படுத்தி, பயங்கரவாதம் இல்லாத சூழலையும், வன்முறையற்ற நிலையையும், விரோதமில்லாத போக்கையும் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத சூழலை உருவாக்குவது அவசியம் என்று தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எந்தவித கருத்தும் பிரதமர் மோடி சார்பில் தெரிவிக்கப் படவில்லை என்று கூறினார்.
Weekly Media Briefing by Official Spokesperson (June 20, 2019) https://t.co/1VpFaQlXof
— Raveesh Kumar (@MEAIndia) June 20, 2019




