சோதனை மேல் சோதனை..! சொந்த வீட்டை காலி செய்து… வாடகை வீடு தேட எண்ணும் சந்திரபாபு நாயுடு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

chandrababu naidu - 2026

பாவம் இந்த மனிதருக்கு வந்த வேதனையைப் பாருங்கள்!! வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீடு தேட பேசிக் கொண்டிருக்கிறார் தெலுங்கு தேச கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு என்கிறார்கள் ஆந்திரப் பிரதேசத்தில்!

பிரஜா வேதிகை என்ற அரசு கட்டடத்தையே அக்கிரம கட்டடம் என்று சொல்லி ஜெகன்மோகன் ரெட்டி அரசு உடைத்து எறிந்து விட்டதால், புது வீடு தேடுவது மேல் என்று நாயுடுகாரு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

குண்டூர் மற்றும் விஜயவாடாவுக்கு விரைந்து சென்று சேரும் வகையில், தனது புதிய வீடு அமையும் படி, அருகில் இருக்கும் இடத்தில் வாடகைக்கு வீடு பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் சந்திர பாபு நாயுடு. இது குறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களிடமும் பேசியுள்ளார்.

‘கரகட்டு’ என்று அழைக்கப்படும் கிருஷ்ணா நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள பிரஜா வேதிகையும், சந்திரபாபு நாயுடு தற்போது வசிக்கும் ‘லிங்கமனேனி’ கெஸ்ட் ஹவுஸும் பக்கத்து பக்கத்து கட்டடங்கள்தான்!

பிரஜாவேதிகை இரண்டு நாட்களாக இடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரும்புக் கூரைகளை நட்டு போல்டுகளை நீக்கி எடுத்து எறிந்துவிட்டால் முழுதாக தரைமட்டமாக்கப்பட்டு விடும். அதன் பின் அடுத்த குறி, தான் வசிக்கும் வீடு தான் என்று நாயுடு உணர்ந்து விட்டார்.

அதனால் அதற்கு முன்பே தான் காலி செய்துவிடுவது நல்லது என்று தீர்மானித்துள்ளார். அதன் மூலம், மானமாவது மிஞ்சும் என்று நினைக்கிறார் நாயுடு என்று கூறுகிறார்கள் தெலுங்கு தேசம் கட்சியினர்.

தலைநகர் அமராவதி அருகிலேயே இருக்கும் ‘உத்தண்ட ராயுனி பாலெம்’ என்ற இடத்தைச் சேர்ந்த சில தெலுங்கு தேசம் தலைவர்கள் சந்திரபாபுவுக்கு நிலம் அளிக்க முன்வந்துள்ளனர். அவர் வீடு கட்டிக் கொள்வதாக இருந்தால் தேவையான நிலத்தை அளிக்க மூன்று நான்கு பேர் வரை தயாராக இருக்கிறார்களாம்.

சந்திரபாபு வாடகை வீட்டுக்குப் போவாரா? சொந்தமாக வீடு கட்டிக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கின்றன ஆந்திர ஊடகங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.