ஆக்ரா அருகே சர்ச் மீது தாக்குதல்: கிறிஸ்துவர்கள் போராட்டம்

church-agra-vandalised ஆக்ரா: ஆக்ரா அருகே சர்ச் ஒன்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கிறிஸ்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பிரதாப்பூர் பகுதியில் ஆங்கிலேயர் காலத்து பழைமையான புனித மேரி சர்ச்சில் பங்குத்தந்தை தாப்ரேயின் குருபட்ட வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் விழா முடிந்த பின்னர் சர்ச்சைப் பூட்டி விட்டு அனைவரும் சென்று விட்டனர். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சர்ச்சுக்கு வந்து, அங்கே திடீரெனத் தாக்குதல் நடத்தி, சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் சர்ச் கதவைத் திறக்க முயன்றுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால், சர்ச் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் சர்ச்சில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலித்துள்ளது. இதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம். சர்ச் அலாரம் ஒலித்ததைக் கேட்டு பங்குத்தந்தை தாப்ரே அங்கு விரைந்துள்ளார். சர்ச் தாக்கப் பட்டிருந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே சர்ச் தாக்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு வந்து கூடினர். தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டித்தும், அவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டமும், பேரணியும் நடத்தினர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து பாதுகாப்புக்காக அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மர்ம நபர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.