ஒன்பதரை ஆண்டுகளாக ஆந்திரா ஆளுநராக சேவை செய்த நரசிம்மன் இனி தெலங்காணாவில் மட்டுமே பணியில் தொடர உள்ளார். அவருக்கான விடைபெறும் நிகழ்ச்சியில் நரசிம்மன் சுவையாக உரையாற்றினார்.
விஜயவாடாவில் ஆளுநர் நரசிம்மன் திங்கள்கிழமை நேற்று மிகவும் உருக்கமான உரையை நிகழ்த்தி ஆந்திர மக்களின் மனத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டார். அப்போது, ஜெகன் செஞ்சுரி மேல் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார் நரசிம்மன்.
விஜயவாடாவில் ஆளுநருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி திங்கள்கிழமை நேற்று நடைபெற்றது. அவருக்கு விடைகொடுக்கும் கூட்ட நிகழ்ச்சியில், ஜகன் தம்பதி, ஆளுநர் தம்பதிக்கு பரிசளித்துப் பாராட்டினார்கள். இந்த நேரத்தில், ஆளுநர் நரசிம்மன் முக்கிய உரையாற்றினார்.
“ஆந்திரப் பிரதேச மக்களை எப்போதும் என்னால் மறக்க முடியாது. நான் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிக்க வேண்டும்” என்று கூறிய நரசிம்மன், தனக்கு உதவிகரமாக இருந்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
“ஆந்திரப் பிரதேசத்தோடு எனக்கு பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது. 1951இல் விஜயவாடாவில் தான் என்னுடைய அட்சர அப்பியாசம் நடந்தது. அப்போது நாங்கள் கவர்னர் பேட்டையில் வசித்து வந்தோம். என் பெற்றோர் அஹோபிலம் நரசிம்மன் பெயரை எனக்கு சூட்டினார்கள்… என்று தன் இளமைக் காலத்தை நினைவு கூர்ந்தார் நரசிம்மன்.
அப்போது, முதல்வர் ஜகனை ஆளுநர் புகழ்ச்சி மழையில் நனைய வைத்தார். “பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, “நன்னு பாலிம்ப்ப நடசி ஒச்சிவா நா ராமா…” என்ற தியாகராஜ கீர்த்தனையை கேட்டதும் …. எங்களை ஆட்சி செய்து வழிநடத்துவதற்கு நடந்து வந்தாயா ஜெகன் என்று மாநில மக்கள் கேட்பது போல தோன்றியது.
டி20 மேட்சில் முதல் 10 ஓவர்கள் ஆடுவது கடினம். நான்கு ஃபீல்டர்கள் சர்க்கிள் வெளியே நிற்பார்கள். முதல் 10 ஓவர்களில் தான் அதிக ரன்கள் எடுக்க வேண்டும். கேப்டனாக, ஓபனராக, கடந்த முப்பத்து நான்கு நாட்களாக உன் ஆட்சி அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு பந்தும் சிக்ஸராக ஃபோராக திருப்பினாய். 10 ஓவர்களுக்குப் பிறகு நின்று ஆட வேண்டும். கடைசியில் மீண்டும் ஹிட்டிங் செய்ய வேண்டும். நீ இதேபோல ஆடுவாய் என்று நம்புகிறேன். இறுதிவரை நாட் அவுட்டாக நின்று செஞ்சுரி மேல் செஞ்சுரி அடிப்பாய் என்று நம்புகிறேன்.
சட்டப் பேரவையில் ஜகன் அனுசரிக்கும் வழிமுறை நன்றாக உள்ளது. எதிர்காலத்திலும் இதேபோல் தொடர வேண்டும். நீ வரலாறு படைப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நரசிம்ம அவதாரம் வந்து பணி செய்து விட்டுப் போய்விடும். ஆனால் இந்த அவதாரம் மட்டும் ரொம்ப நாள் இருந்து விட்டது .
நான் ஆந்திர ஆளுநராக இருக்க முடியாது. ஆனால் நரசிம்மன் ஆந்திரத்தைக் காப்பாற்றுவார். அந்த அகோபிலம், சிம்மாசலம், மங்களகிரி நரசிம்மர்கள் மாநிலத்தை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வார்கள்.
ஜகன் தேர்தலில் வென்ற பின் திருப்பதி சென்றார். சர்ச்சுக்கு சென்றார். மசூதிக்கு சென்றார். இந்திர கீலாத்ரி சென்றார். தந்தையின் சமாதிக்கு சென்று வந்தார். ஆனால் உன் யாத்திரை இன்னும் முடியவில்லை என்று நான் ஜெகனுக்கு தெரிவித்தேன். என் அறிவுரைப்படி ஜெகன் மங்களகிரி நரசிம்மரை தரிசித்து விட்டு வந்தார்” என்று கூறினார் ஆளுநர் நரசிம்மன்.
கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக தன்னை ஆதரித்த ஆந்திர மக்களுக்கு நன்றியைத் தெரிவித்தார் ஆளுநர் நரசிம்மன்.
“ஜெகன்…! கடந்த 34 நாட்களுக்குள் நிறைய சுதந்திரம் எடுத்துக் கொண்டு பணி செய்தேன். என்னை மன்னித்துவிடு! ஒரு நிலையில் அளவுக்கு அதிகமாக தலையிட்டேன். ஜெகன் என் மகன் வயதில் இருக்கிறீர். மாநிலத்தின் நன்மைக்காகவே அவ்வாறு செய்தேன். ஊழலற்ற ஆட்சியும் முன்னேற்றமுமாக இதேபோல் மாநிலத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஜெகன் வரலாறு படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று நரசிம்மன் தன் உரையை முடித்தார்.
ஜகனுடைய பதவிப் பிரமாணத்தின் போது, தியாகராஜ கீர்த்தனை இசைக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
இதன் பின்னர் நன்றி தெரிவித்து ஜெகன் பேசிய போது, “ஆளுநரை இவ்வாறு வழி அனுப்புவது ஒரு விதத்தில் வருத்தமாக உள்ளது. அவர் அருகிலேயே இருப்பார் என்ற மகிழ்ச்சி கூட உள்ளது. சென்ற பத்து ஆண்டுகளாக அவரை எனக்கு நன்றாக தெரியும். ஒரு தந்தை போல் எனக்கு அறிவுரை வழங்குவார்.
நான் முதல்வர் ஆன பின் என் கையைன் பிடித்து நடக்கவைத்தார். இன்னும் அவரே ஆளுநராக தொடர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த ஐந்து ஆண்டுகள் அவர் என்னை நடத்தும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன். அவர் எங்கிருந்தாலும் ஆந்திர மக்களின் சார்பாக எப்போதும் மறக்க மாட்டோம். அவரோடு பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றிகள்” என்றார்.