டிவிட்டர் சமூகத் தளத்தில் இந்தியர்களால் அதிகம் ஃபாலோ செய்யப் படும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவரை 13 மில்லியன் பயனர்கள் டிவிட்டரில் ஃபாலோ செய்கின்றனர்.
கடந்த 2014 – 2019 மோடி அமைச்சரவையில், மத்திய அமைச்சராக பதவியேற்ற போது டுவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி, பல்வேறு பணிகளை திறம்பட செய்து வந்தார். இதன் மூலம் டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், அதிக எண்ணிக்கையிலான பின் தொடர்பவர்களை உடைய பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார் சுஷ்மா ஸ்வராஜ்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு டிவிட்டர் பதிவுகளின் மூலமே நேரடியாக கவனம் பெற்று, தீர்வுகளைக் கொடுத்திருக்கிறார். டிவிட்டரில் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து, புகார் தெரிவித்த உடனேயே, அதுகுறித்து பதில் கொடுத்து, தீர்வு காணவும் செய்துள்ளார். எனவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கும் மிகவும் பிடித்துப் போன இந்தியத் தலைவராகத் திகழ்ந்தார் சுஷ்மா ஸ்வராஜ்.
இவர் நேற்று பதிவு செய்த கடைசி டிவிட் இப்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. மிக்க நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளைத்தான் நான் காணக் காத்திருந்தேன்’ என டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
प्रधान मंत्री जी – आपका हार्दिक अभिनन्दन. मैं अपने जीवन में इस दिन को देखने की प्रतीक्षा कर रही थी. @narendramodi ji – Thank you Prime Minister. Thank you very much. I was waiting to see this day in my lifetime.
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 6, 2019
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370ஐ திரும்பப் பெற்றும், காஷ்மீரின் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீரை தற்காலிக யூனியன் பிரதேசமாகவும் அறிவித்து மத்திய அரசு செய்துள்ள சாதனைக்கு தனது ட்விட்டரில் இவ்வாறு நன்றி தெரிவித்து, தனது கடைசி மூச்சையும் காஷ்மீரின் மீட்புக்காக முன்னிறுத்தியுள்ளார் சுஷ்மா ஸ்வராஜ்!
முன்னதாக, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கே அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். .




