நாட்டு நலன் கருதி… மத்திய அரசின் முடிவை ஆதரிக்கிறேன் ! : காங்., முன்னாள் எம்பி.,!

இந்தியா சற்றுமுன்

congress scindia - 2026

நாட்டு நலன் கருதி, காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஜோதிராதித்ய  சிந்தியா தாம் ஆதரிப்பதாக டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370ஐ மத்திய  அரசு திரும்பப் பெற்றது. மேலும் காஷ்மீர்  மாநிலத்தை இரண்டாகப் பிரித்து காஷ்மீர், லடாக் என இரு  யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றவுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேச முகமாகத் திகழும் ஜோதிராத்யா சிந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரோ, ஒரு படி மேலே சென்று காஷ்மீர் உள்நாட்டுப் பிரச்னை என்பதை விட, அது சர்வதேச ஐ.நா.,வின் கண்காணிப்பில் உள்ளது என்றார். தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் தலைவர்  ராகுலும் தனது டிவிட்டர் பதிவில்  எதிர்ப்பினை பதிவு செய்தார்.  இந்நிலையில் காங்கிரஸின் இளைய தலைவர் என அடையாளம் காணப்படும் ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்துள்ள டிவிட்டர் பதிவில்… காஷ்மீரையும் லடாக்கையும் இந்தியாவுடன்  முழுமையாக இணைக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அரசியல் சாசன நடைமுறைகளை  சரியாக பின்பற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.  அவ்வாறு செய்திருந்தால் எந்த கேள்வியும்  எழுந்திருக்காது. தேச நலனுக்காக எடுக்கப்பட்ட இம்முடிவை நான் ஆதரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவிய ஜோதிராத்யா சிந்தியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.