தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் ரவி தாகூர் நேரில் ஆய்வு

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வனப் பகுதியில், தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை தேசிய பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவர் ரவி தாகூர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசு அதிகாரிகளுடனும் அவர் விரிவாக ஆலோசனை நடத்துகிறார். பின் தில்லி செல்லும் ரவி தாகூர், தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பழங்குடியினர் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். செம்மரம் வெட்டியதாகக் கூறி, ஆந்திர வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சசி குமாரின் குடும்பத்தினரிடம் ரவி தாகூர், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், தமிழர்கள் சுடப்பட்ட சம்பவத்தை மனித உரிமை ஆணையம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.