நாட்டையும், மக்களையும் பற்றி சிந்திக்காத, ஊழல்,லஞ்சம் நிறைந்த ஆட்சி அதிமுக: ஸ்டாலின் பிரச்சாரம்!

stalin 4

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம், சிவந்திபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து, திண்ணைப் பிரச்சாரம் செய்து, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அப்போது அவர் பேசியதாவது;

இன்று உங்களைத் தேடி வந்திருக்கிறோம். ஏன் வந்திருக்கிறோம்? எதற்கு வந்திருக்கிறோம்? என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

வருகிற 21-ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறப் போகிறது. இந்த இடைத்தேர்தலில் நமது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ரூபி மனோகரன் அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

stalin 2

உங்களிடத்தில் வந்து, “எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று கேட்கவேண்டிய அவசியமே இல்லை. காரணம், நீங்கள் எப்போதும் தி.மு.க.விற்கும் தலைவர் கலைஞருக்கும் எங்களுக்கும் என்றைக்கும் பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், தொடர்ந்து, தி.மு.க.,விற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இருந்தாலும், ஏன் வந்து எங்களிடம் ஓட்டு கேட்கவில்லை என்று ஒரு குறையைச் சொல்லிவிடக்கூடாது. அந்தக் குறை உங்களுக்கு இருக்கக் கூடாது. அதனால்தான் உங்களைத் தேடி வாக்கு கேட்க வந்திருக்கின்றோம்.

stalin 3

நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் விவசாயத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை; பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றியும் கவலைப்படவில்லை; நாட்டைப் பற்றியும் கவலைப்படாத, மக்களைப் பற்றியும் சிந்திக்காத ஒரு ஆட்சி இப்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பாடுபட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள். உதாரணமாகச் சொல்லவேண்டுமென்று சொன்னால், சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை வாங்கிக் கொடுத்தார்.

stalin

அதே போன்று திருமணத்திற்கு உதவித்தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம், பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாகப் பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று சட்டம் என இப்படி பல திட்டங்களையும் – பெண்கள் எல்லோரும் தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும்; யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நீங்கள் நிற்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுவையும் தலைவர் கலைஞர் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்த போது 90-ஆம் ஆண்டு துவங்கி வைத்தார்.

அதேபோல், விவசாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் முதன்முதலில் 1989 – 90களில் ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் கொடுத்ததும் கலைஞர் அவர்கள்தான். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அதே போன்று, 5-வது முறையாக தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, விவசாயிகள் கூட்டுறவு வங்கி வாங்கியிருக்கும் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வேன் என்று சொல்லி 7,000 கோடி ரூபாய்க்கும் மேலான கடனைத் தள்ளுபடி செய்த தலைவர் – முதலமைச்சர் தான் தலைவர் கலைஞர் அவர்கள். ஆனால், இப்போது இருக்கக்கூடிய ஆட்சியில், ஏறக்குறைய 250 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருக்கிறார்கள்.

stalin 1

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுடன் இருந்து மக்கள் பணிகளுக்காகத் துணை நிற்பது தி.மு.க. மட்டுமே

அ.தி.மு.க. ஆட்சி இப்போது பிழைக்க வேண்டுமானால், அவர்களின் சட்டமன்ற உறுப்பினர்களுடைய எண்ணிக்கை குறைந்து விடக்கூடாது. ஏனென்றால் இந்த ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு பேர் போனாலும் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்துவிடும்.

அதையெல்லாம் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர்களுக்கு கமிஷன் கொடுத்து, கோடி கோடியாக பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களையும் அமைச்சர்களையும் பிடித்து வைத்திருக்கிறார்கள். கோடி கோடியாக எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வசூல் செய்ய – கொள்ளையடிக்க வேண்டும்; ஊழல் செய்ய வேண்டும்; லஞ்சம் வாங்க வேண்டும்; கமிஷன் வாங்கவேண்டும்!

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :