‘ஸாரி அங்கிள்….’
பெரியவாளைப் பார்ப்பதற்கு முன், beggar!
பெரியவா அருட்பார்வைபட்ட பின்னர், Uncle!
சொன்னவர்; ஸ்ரீமடம் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
பால் பிரண்டன் மிஷன் (Paul Brunton Mission) என்று அமெரிக்காவில் ஓர் அமைப்பு. (இந்திய தத்துவ ஞானிகளைத் தரிசிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் பாரதம் வந்த பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பால் பிரண்டனைப் போற்றும் இயக்கம். பிரண்டன், பெரியவாளைத் தரிசித்து, அவர்கள் அறிவுரையின்படி ரமண மகரிஷியிடம் சென்று,அவருடைய அருட்பார்வைக்கு இலக்கானவர்.) அந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ,வருஷந்தோறும் காஞ்சிபுரம் வந்து, பத்துப் பதினைந்து நாட்கள் தங்கி பெரியவா தரிசன வெள்ளத்தில் மூழ்கிப் போவார்கள்.
அந்த வருஷமும் ஒரு கோஷ்டியினர் வந்திருந்தார்கள். ஒரு நாள் ஸ்ரீ மடத்தில் அப்போதிருந்த பவழமல்லிமரத்தின் அடியில் அமர்ந்து அவர்களுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் பெரியவாள்.
பெரியவா, கண்களை மூடிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கப் பையன்கள், பெரியவாளைச் சுற்றிஉட்கார்ந்து கொண்டு கண்களை மூடி தியானத்தில் இருந்தார்கள். நிசப்தம். ஓர் அரவமும் இல்லை.
சிசுருஷை செய்யும் பணியாளர்களான பாலுவும்,வேதபுரியும் அந்த இடத்தை விட்டு ஸ்ரீமடத்தின் வாசற்புறம் வந்தார்கள். அப்போது ஒரு கார் வந்து நின்றது.நடு வயதுத் தம்பதி. மூன்று குழந்தைகள் இறங்கினார்கள்.
குழந்தைகள் மேல்நாட்டு நாகரீகத்தில் ஊறிப்போனவர்கள் என்பதை அவர்கள் உடையிலிருந்தே தெரிந்து கொள்ளமுடிந்தது.
வாசலில் நின்று கொண்டிருந்த பாலுவையும்,வேதபுரியையும் பார்த்தார்கள்.நீர்க்காவி வேஷ்டி, கட்டுக் குடுமி,பட்டையாகத் திருநீறு,கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை.
அல்ட்ரா மாடர்ன் பையன்களுக்கு ஒரே இளக்காரம். “யார் இவர்கள் – பத்தாம் பசலிப் பேர்வழிகள்.! உள்ளே யாரோ சாமியார் இருக்கிறாராமே.? அவரும் இப்படித்தான் இருப்பாரோ.? …Dirty People..Uncivilized….fools…beggars…who are they.?…”
இந்தக் கிண்டலைக் கேட்டுக் கொண்டே, பாலுவும், வேதபுரியும் போய்விட்டார்கள்.
அந்த ஐந்து பேர்களும் உள்ளே சென்று பெரியவா எதிரில் அமர்ந்தார்கள்.குழந்தைகளின் பெற்றோர் கூடஅது வரையில் பெரியவாளைத் தரிசித்ததில்லை. பட்டுப் புடவை வாங்க வந்த இடத்தில், ஒரு நண்பர் சொன்னார் என்பதால் ஸ்ரீமடத்தை எட்டிப் பார்க்க வந்தவர்கள் அவர்கள்.
இது என்ன, ஸ்வாமிகளைச் சுற்றி வெள்ளைக்காரர் சிறுவர்கள்.? கால்களை மடக்கி உட்கார்ந்து கொண்டு,கண்களை மூடிக் கொண்டு, தியானம் செய்து கொண்டு. அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியக் குழந்தைகள், அமெரிக்காவிலிருந்து வந்த அமெரிக்கக் குழந்தைகளுடன் கிசுகிசுக் குரலில் பேசத் தொடங்கின.
“எங்கேயிருந்து வந்திருக்கிறீர்கள்.? இங்கே என்ன விசேஷம்.? என்ன Purpose.? இங்கே வந்து எத்தனை நாள் ஆயிற்று.?..”
ஓர் அமெரிக்கப் பையன் உற்சாகமாகப் பதில் சொன்னான்;
“ஒரே பர்ப்பஸ் – பெரியவா தரிசனம்.! அதற்காகவே வந்தோம். தெய்வத்தின் அவதாரம் இந்த ஸ்வாமிகள் என்று நாங்கள் நம்புகிறோம்.இவரைத் தரிசிப்பதால் எங்கள் ஆன்மாவில் புதிய சக்தி ஏற்படுகிறது. அது வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டிருக்கும். இது ஒரு பெரும் பாக்கியம்.!”
இந்தியப் பையன்களுக்கு இப்போதுதான் புத்தொளி தோன்றியது. “ஆகா.! அமெரிக்கர்கள் இந்த Indian Sageஐப் பார்க்க வருகிறார்கள். ஆனால், Indians ஆன நமக்கு,இந்த மகானைப் பற்றி தெரியல்லே.. ‘Shame,Shame.”
பெரியவா மௌனம் கலைகிறது. தம்பதியையும் குழந்தைகளையும் பார்த்து வ்சாரிக்கிறார்கள். பெரியவாளை குழந்தைகள் கண் கொட்டாமல் பார்க்கிறார்கள். ஏதோ ரஸவாதம் நிகழ்கிறது.
‘இனி இந்தியாவுக்கு வந்தால் இந்த மகானைப் பார்க்காமல் திரும்பக் கூடாது’
பிரசாதம் பெற்றுக்கொண்டு போகிற வழியில் மடத்து வாசலில் பாலுவும்,வேதகிரியும் எதிர்ப்படுகிறார்கள்.அதே dirty,beggars!
பெரியவா தரிசனத்துக்குப் பின் இவர்கள் dirty இல்லை.uncivilized இல்லை.
மூவரும் ஒரே குரலாய், “Sorry,uncle…”.
பெரியவாளைப் பார்ப்பதற்கு முன், beggar!பெரியவா அருட்பார்வைபட்ட பின்னர், Uncle!



