
தமிழகம், புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும், மூன்று நாட்களுக்கு பிறகு மழை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அக்.18 இன்று முதல் வரும் அக்.20ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அக்.21 மற்றும் 22ம் தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் மாதம் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவில் 8 சதவீதம் கிடைத்துள்ளது. மீனவர்கள், கேரள கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




