
சுங்கச்சாவடியில் வம்பு வளர்த்த நாம் தமிழர் தம்பிக்கு தர்ம அடி கொடுக்கப் பட்டுள்ளது. அதில், அவரது சட்டை கிழிந்தது. முதுகு தோலை உரித்து அனுப்பி வைத்தனர் பொது மக்கள்!
புதுக்கோட்டை அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்துவிட்டு உருட்டுக் கட்டையால் தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சிப் பிரமுகரை மடக்கி பிடித்து, சுங்கச் சாவடி ஊழியர்கள் தர்மஅடி கொடுத்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அந்த நபர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளராக களம் கண்டவர்!
புதுக்கோட்டை கீரனூர் சுங்கச்சாவடியில் தகராறில் ஈடுபட்டு தாக்குதலுக்கு உள்ளான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வினோத் குமார் விவகாரம் இப்போது விவாதிக்கப் பட்டு வருகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தி வரும் பன்ருட்டி வேல்முருகனின் சுங்கச்சாவடி புகழை தட்டிப் பறிக்கும் அளவுக்கு நாம் தமிழர் கட்சியினரும் இறங்கியுள்ளது குறித்து விவாதிக்கின்றனர் சமூகத் தளங்களில்!
திங்கட்கிழமை நேற்று, புதுக்கோட்டைக்குச் செல்லும்போது தன்னை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் என்று கூறிக் கொண்டு, சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளார் வினோத் குமார். திரும்பி வந்த போதும் அதேபோல நான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என்று அவர் சொல்லத் தொடங்கியதும், சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு செல்லுமாறு அங்குள்ளவர்கள் கூறியதால் கோபம் அடைந்த வினோத் குமார், ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக் கூட்டங்களில் அக்கட்சியின் பெரியண்ணன் சீமான், சுங்கச் சாவடிகளில் வேலை செய்பவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள், அவர்களுக்கு நம் தமிழ்நாட்டில் இடம் கொடுப்பதா என்று உசுப்பேற்றி விட்டிருப்பதால், வினோத் குமாரும் இந்த சுங்கச்சாவடியில் இருப்பவர்கள் வடநாட்டுக் காரர்கள் என்று நினைத்துக் கொண்டார்.
அதன்படி, வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பதா? என்று கேட்டுக் கொண்டே, உருட்டுக் கட்டையை எடுத்து வந்து சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியுள்ளார் வினோத் குமார்.
ஆனால், உருட்டுக் கட்டையைத் தூக்கி தாக்கியபின்னரே தெரிந்தது, அங்கிருந்த அனைவருமே ‘அக்மார்க்’ தமிழர்கள் என்று! காரணம், அங்கிருந்த 15க்கும் மேற்பட்டோர் கடும் கோபக் கனல் கண்களில் கொப்புளிக்க பதிலுக்கு வினோத் குமாரின் சட்டையைப் பிடித்து உலுக்கி கேள்வி கேட்டது மட்டுமல்லாமல், தமிழரின் வீர விளையாட்டுகளை எல்லாம் வினோத்குமாரிடம் காட்டத் தொடங்கிவிட்டனர்.
இந்த தர்ம அடியில் வினோத் குமாரின் சட்டை கிழிந்தது. தமிழர்களின் கும்மாங்குத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், நாம் தமிழர் தம்பி வினோத்குமார், தப்பி ஓட முயன்றுள்ளார். முதுக்குத் தோல் உரியும் அளவுக்கு அடி வாங்கி, புறமுதுகிட்டு ஓடிய வினோத் குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் போய் தஞ்சம் புகுந்தார்.
ஆனால், இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் பிரச்னை ஆகிவிடும் எனக் கருதிய நாம் தமிழர் தம்பி வினோத்குமார் தாம் தாக்கப் பட்டது குறித்து முதலில் புகார் அளிக்காமல் இருந்து விட்டாராம். ஆனால், உருட்டுக் கட்டையால் அடிவாங்கிய தமிழரான ஊழியர் சார்பில் சுங்கச்சாவடி தரப்பில் புகார் அளித்ததால் வினோத்குமாரும் புகார் அளிக்க வேண்டியதாயிற்று.
இதை அடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனராம்!



