சென்னை: நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு தாங்கள் அளித்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இது குறித்து மோடி ஆற்றிய வானொலி உரை பொய் என்று கூறியுள்ளார். நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகளிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பிரசாரம் செய்து வருகிறார். இந்தக் காரணத்துக்காக, ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த ஜெய்ராம் ரமேஷ் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி முழுமையாக எதிர்க்கிறது. மக்களவையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டனர். மாநிலங்களவையில் நிறைவேற்ற உள்ளனர். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன. பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் எதிர்க்கிறது. எனவே, மாநிலங்களவையில் இந்தச் சட்டம் நிறைவேறாது. விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் நிலத்தைக் கையகப்படுத்துவது, கையகப் படுத்தப் படும் நிலம் 5 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், மீண்டும் விவசாயிகளிடம் தர மறுப்பது, நிலம் கையகப்படுத்துவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு சுற்றுப்புற தாக்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற பிரிவை நீக்கியது உள்ளிட்ட காரணங்களால் இந்தச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. 2013ல் காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எல்லாக் கட்சிகளும் ஆதரித்தன. ஆனால் இப்போது ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை அதன் பாதிப்புகளை உணர்ந்து எல்லாக் கட்சிகளும் எதிர்க்கின்றன. அதிமுக இந்தச் சட்டத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டத்துக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும். மாநிலங்களவையில் இதனை அதிமுக எதிர்க்க வேண்டும். மோடி இந்தச் சட்டத் திருத்தத்தில் உள்ள உண்மை நிலையை முற்றிலுமாக மறைக்கிறார். அவர் வானொலியில் இது குறித்துக் கூறிய கருத்துகள் அனைத்தும் பொய்யானவை என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம்- மோடியின் வானொலி உரை பொய்: ஜெய்ராம் ரமேஷ்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari