
திமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,!
பாமக., நிறுவுனர் ராமதாஸ் கிளப்பிய ஒரு தீப்பொறி, பாஜக., மாநில செயலர் மதுரை பேராசிரியர் சீனிவாசனால் மேலும் பெரிதாக்கப் பட்டது. தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தில் பஞ்சமி நிலம் குறித்து விசாரித்து அறிய வேண்டும் என்று புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆணையம். ஆனால், அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.
மேலும், அரசு நிர்வாக ரீதியில், திமுக.,வுக்கு உதவுவது போல் கூறப் படுகிறது. இதனை இன்றைய திமுக., பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலினே உறுதி செய்திருக்கிறார்.
“முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்; அதை பூட்டுப் போட விடுவோமா?
முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்திருந்தால், அதை வெளியிடாமல் இருப்பார்களா? – என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம், அதிமுக., அரசு, திமுக.,வை பிரச்னையில் இருந்து காப்பாற்ற ரகசிய வேலைகளைச் செய்து வருவது, ஸ்டாலின் வாக்கில் இருந்தே வெளிப்பட்டிருக்கிறது என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் அண்ணா அறிவாலயம் குறித்த அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார் அ.இ.அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ்.
அவர் தனது டிவிட்டர் பதிவில்,
வாழ வழியில்லா தோருக்கு சமூகக்கூடம் அமைப்பதாக கூறி அடிமாட்டு விலைக்கு அபகரிக்கப்பட்ட இடம் தான் அறிவாலயம்
பஞ்சமி நிலமாக இருந்து பறிக்கப்பட்ட இடம் தான் முரசொலி கட்டடம்
பிறர் நிலங்களை அபகரித்துவிட்டு நாடகமாடுவது தி.மு.க-விற்கு புதிதல்ல
#மூலப்பத்திரத்தகாட்டுஇல்லனாமுரசொலியபூட்டுஎன்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் மிஸா கைது குறித்து தெரிவித்த கருத்து திமுக., தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பாண்டியராஜனின் தரத்தைப் பாரீர் என்று ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம் என்று ஏலம் விட்டார் ஸ்டாலின்.
அப்போது, இன்னும் இரு நாளில் மிஸா பற்றிய தகவல்களைத் தருகிறேன் என்று சவால் விட்டார் பாண்டியராஜன். பின்னர் முதலமைச்சரிடம் பேசினேன், அவர் அமைதி காக்கச் சொன்னார் என்று கூறி, நம் போராட்டத் தளம் வேறு என்று அமைதியாகிவிட்டார்.
இப்போது, முதலுக்கே மோசம் என அண்ணா அறிவாலய நிலம் பற்றி ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை ஆசிரியரே மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். இந்தச் சர்ச்சைக்கும் மூடுவிழாவை அதிமுக., தலைமையே விரைவில் நடத்துமோ என்னவோ?!



