
உள்ளாட்சித் தேர்தலில் நேரடி தேர்தல் இல்லாத மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள், அதற்காக செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் குறித்த விறுவிறு அரசியல் களத்தால் நம்பிக்கை பெற்ற தமிழக அரசியல் கட்சிகள், தங்களது கட்சிகளின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.
இந்நிலையில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக பொதுக் குழு முடிந்த பிறகு நவ.25 முதல் 29 ம் தேதி வரை, தாங்கள் செலுத்திய கட்டண ரசீதைக் காட்டி விருப்ப மனுக் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலைத் தாமதப் படுத்துகின்றனர் என்றும், 5 புதிய மாவட்டங்களில் எல்லைகள் சீரமைக்கப் பட்ட பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் திமுக., உள்ளிட்ட கட்சிகள் கூறிய நிலையில், இந்த முறையும் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
அதே நேரம், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், விருப்ப மனுக்களுடன் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக., அறிவித்துள்ளது.
எனவே, வழக்குகளால் இந்த முறையும் உள்ளாட்சி தேர்தல் தடைபடுமோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.



