பராமரிப்பில் அலட்சியம்: பிரேக் பிடிக்காத ஸ்கூல் வேன் கால்வாயில் கவிழ்ந்து 3 பேர் பலி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பிரேக் பிடிக்காத ஸ்கூல் வேன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் எஸ்.ஜி.எஸ். நினைவு மெட்ரிக் பள்ளியில் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியை சேர்ந்த 9 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள், தினமும் பள்ளி வேனில் சென்று வருவர். அதுபோல், நேற்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் பள்ளி வேன், வேங்கோடு பகுதியில் உள்ள 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கருங்கல் நோக்கி புறப்பட்டது. வேனை கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ் (30) ஓட்டிச் சென்றார். அந்த வேன் வேங்கோடு பகுதியில் சென்ற போது, school-busபிரேக் பழுதாகி தாறுமாறாக ஓடி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு டீக்கடை சுவர் மீது மோதியது. பின்னர் கடையின் பின்புறம் உள்ள கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. அப்போது, அந்தக் கால்வாயில் விஜயகுமார் என்பவரின் மனைவி கனகலதா குளித்துக் கொண்டிருந்தார். அவர் மீது அந்த வேன் பாய்ந்தது, இதனால் வேனுக்கு அடியில் சிக்கிய கனகலதா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேன் ஓட்டுநர் ஜெனிஷும் இடிபாடுகளில் சிக்கி பலியானார். இந்நிலையில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகளும், ஆயாவும் கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் ஓடிவந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்துவந்த புதுக்கடை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் சஜின்குமார் (8), அனிதா (8), ஜோஸ்லின் (4), அஸ்வின் கிறிஸ்டி (9), பெனர்லின் (5), பியுலின் டெனி (9), ஜோஸ்லின் டால் (5), சாம்லின் அஸ்வினி, வேனில் இருந்த ஆயா நேசம் ஆகியோரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கக் கொண்டு செல்லும் வழியில் மாணவன் சஜின்குமார் உயிரிழந்தார். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். இந்நிலையில், படுகாயம் அடைந்த ஆயா மற்றும் பள்ளி குழந்தைகள் 8 பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதுக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.