“கோவிந்த நாமத்தின் சிறப்பு”
‘ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்.’ அதனால், ‘இந்து மதத்தில் ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா எது?’ என்று யாராவது என்னிடம் கேட்டால், ‘கோவிந்தா’தான் என்று சொல்வேன். -பெரியவா
கோவிந்தா என்கிற நாமத்தை ஒரு முறை சொன்னாலே அந்த இடம் சுத்தமாகிவிடும்; புனிதம் பெறும்’ “கோவிந்த நாமத்தின் சிறப்பு”-ராஜாஜி
மகா பெரியவாளின் கருத்து+ராஜாஜி.-இரண்டும் இணைந்த கட்டுரை
கட்டுரையாளர்;பி.சுவாமிநாதன்
தீபம்-இதழில்-ஒரு பகுதி.2013
கோவிந்த நாமத்தின் சிறப்பு பற்றி, காஞ்சி மகா பெரியவாளின் கருத்துக்களைத் தாங்கிய பொக்கிஷமான ‘தெய்வத்தின் குரல்’ (நான்காம்) தொகுப்பிலும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது:
ஈஸ்வர நாமாக்களுள், ‘ஹர’ என்பதற்கும், விஷ்ணுவின் நாமாக்களுள் ‘கோவிந்த’ என்பதற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.
ஸத் சங்கத்துக்காக, ஸத் விஷயத்துக்காகப் பலர் கூடினாலும், மனுஷ்ய ஸ்வபாவத்தில் கொஞ்ச நேரம் போனதும், கூட்டத்தில் பலர் பல விஷயங்களை, சளசளவென்று பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேச்சை நிறுத்தி, பகவானிடம் மனசைத் திருப்புவதற்கு என்ன செய்கிறோம்? யாராவது ஒருத்தர், ‘நம: பார்வதீ பதயே’ என்கிறார். உடனே, பேசிக் கொண்டிருந்த எல்லோரும் ‘ஹர ஹர மஹாதேவ’ என்கிறார்கள். அதுபோல், ‘ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்’ என்று சொன்னவுடன் கூட்டம் முழுதும், ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பரவசப்படுகிறது.
‘ஸர்வத்ர’ என்று – அதாவது எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் என்று அடைமொழி கொடுத்திருக்கிறது – ‘ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்.’ அதனால், ‘இந்து மதத்தில் ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா எது?’ என்று யாராவது என்னிடம் கேட்டால், ‘கோவிந்தா’தான் என்று சொல்வேன்.
கோவிந்த நாமாவுக்கு இருக்கப்பட்ட அநேக சிறப்புகளில் இன்னொன்று, நம் ஆசார்யாளுக்கு (ஆதிசங்கரர்) அதுதான் ரொம்பவும் பிடித்தது. ‘பஜ கோவிந்த’த்தில் ஒரு மனிதன் வாழ வேண்டிய முறைகளையும், தத்வ உபதேசங்களையும், விவேக வைராக்கியங்களையும் சொல்லியிருக்கிறார். இது சகல ஜனங்களுக்குமானது. இப்பேர்ப்பட்ட சிறப்பு கொண்ட கோவிந்தனை பூஜியுங்கள் என்கிறார் நம் ஆசார்யாள்.
அவருடைய குருவின் பெயர் கோவிந்த பகவத் பாதர். அதனால், குரு – தெய்வம் இரண்டின் பெயராகவும் உள்ள ‘கோவிந்த’ சப்தத்தில், ஆசார்யாளுக்கு அலாதி ப்ரீதி!
– இதுபோல் கோவிந்த நாம விசேஷம் இன்னும்கூட ‘தெய்வத்தின் குரலில்’ அலசப்பட்டிருக்கிறது.
‘கோவிந்தா கோவிந்தா’ என்று இறைபக்தி மேலோங்கச் சொல்வதால், சொல்பவரின் பாவங்கள் தொலைந்து போகும். தவிர, மோட்சத்தை அடைவதற்கு என்னென்ன தடைகள் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் விலகிவிடும்.
ஒரு உடலைத் தகனம் செய்யும்போது, ‘கோவிந்தா கோவிந்தா’ என்கிற நாமத்தைச் சொல்லித் தீயிட்டால், இறந்தவர் மோட்சத்தை அடைவார். எனவேதான், சடலத்தைத் தூக்கிச் செல்லும்போதும், இறந்தவரின் உடல் நம்மைக் கடந்து செல்லும்போதும் ‘கோவிந்த’ நாமத்தை உச்சரித்தால், இறந்தவர் மோட்சத்தை அடைவார் என்று சொல்லப்படுகிறது.
‘கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே மோட்சம் தரவல்லது’ என்று மகான்கள் அருளியுள்ளனர். எப்போதெல்லாம் உங்களது எண்ணங்கள், சிந்தனைகள் சிதறக்கூடிய சந்தர்ப்பங்கள் நேர்கிறதோ, அப்போதெல்லாம் ‘கோவிந்த’ நாமத்தை உச்சரியுங்கள். தெளிவு பிறக்கும்.
க்ஷத்திரபந்து என்பவன், எப்போதும் கொடுமையே செய்து, மனத்தாலும் பிறருக்கு நல்லது நினையாதவனாக வாழ்ந்து வந்தான். மோட்சத்தில் கிடைக்கக்கூடிய ஆனந்தம் பற்றி, சில பக்தர்களுக்கு நாரதர் சொல்லிக் கொண்டிருந்ததை க்ஷத்திரபந்து கேட்டான். அவனுக்கும் மோட்சம் செல்ல வேண்டும் என்கிற ஆசை பிறந்தது. நாரதரிடம் அதற்குண்டான வழிகளைக் கேட்டான். நாரதரும் உபதேசித்தார்.
ஆனால், எவ்வளவோ முயன்றும், நாரதர் சொன்ன வழிமுறைகளின்படி, க்ஷத்திரபந்துவால் வாழ முடியவில்லை. எனவே, மீண்டும் நாரதரைச் சந்தித்து, “நான் மோட்சம் செல்வதற்கு வேறு எளிய உபாயம் சொல்லுங்கள்” என்று கேட்டான். நாரதரும் அவனுக்காக இரங்கி, “கோவிந்த நாமத்தைச் சொல்லிக் கொண்டே இரு” என்று உபதேசித்தார்.
க்ஷத்திரபந்துவும் தான் எந்தச் செயலைச் செய்தாலும், ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பக்திபூர்வமாகச் சொல்லி வந்தான். கோவிந்த நாமம் சொன்னால், பாவங்கள் தொலைந்து போய்விடும் அல்லவா! எனவே, க்ஷத்திரபந்து இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகின. அடுத்த பிறவியில் ஒரு பாகவதருக்குத் தொண்டுபுரியும் ஜன்மம் எடுத்து, நல்லபடி வாழ்ந்து, ஒரு தினம் மோட்சம் பெற்றான்.
கண்ண பரமாத்மாவின் புகழ்பாடும் திருப்பாவையில் ஆண்டாள், 27, 28 மற்றும் 29-வது பாடல்களில் மூன்று முறை கோவிந்தனை அழைக்கின்றாள்.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா (27)
குறைவொன்று மில்லாத கோவிந்தா (28)
இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா (29)
‘கோவிந்தா கோவிந்தா’ என்கிற திவ்ய நாமத்தின் மகிமையைச் சொல்லும், ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது.
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஆலயத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. வெளியில் இருந்தபடியே தரிசித்துச் செல்ல வேண்டும். இதை ஒழிக்க வேண்டும் என்று போராடிய பல தலைவர்களுள், ராஜாஜி குறிப்பிடத்தக்கவர்.
வேங்கடாசலபதி மீது அபார பக்தி கொண்ட தாழ்த்தப்பட்ட அன்பர் ஒருவர், திருமலை ஆலயத்துக்குள் சென்று பெருமாளைத் தரிசிக்க ஆவல் கொண்டார். தனது தரிசனம் எவருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அதிகாலையிலேயே ‘கோவிந்த நாமம்’ சொல்லி, திருக்குளத்தில் நீராடினார். நெற்றியிலும் திருமேனியிலும் திருமண் தரித்து, ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பரவசமாக கோஷம் எழுப்பியபடி கோயிலுக்குள்ளும் நுழைந்தார்.
ஏழுமலையானைக் கண் குளிர தரிசித்தார். ஆலயத்தில் இருந்து வெளியே வரும்போது, ஆலய அதிகாரி ஒருவர் இந்த பக்தரைப் பிடித்துவிட்டார். நீ தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்தானே! எப்படிக் கோயிலுக்குள் நுழையலாம்? உனது இந்தச் செய்கையால் ஆலயத்துக்குத் தீட்டு வந்துவிட்டது. உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று போலீஸ் வசம் ஒப்படைத்து விட்டார்.
சித்தூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆலயத்துக்குள் நுழைந்து பெருமாளைத் தரிசித்த தாழ்த்தப்பட்டவர் மீது தவறு இல்லை” என்று அவர் சார்பாக முனுசாமி என்கிற வக்கீல் ஆஜரானார்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார் ராஜாஜி. அப்போது சில காரணங்களுக்காக, ‘எந்த ஒரு வழக்கிலும் ஆஜராவதில்லை’ என்று ராஜாஜி தீர்மானித்திருந்த நேரம். என்றாலும், தாழ்த்தப்பட்ட இந்த அன்பருக்காக வாதாடுவதற்காக சித்தூருக்குப் புறப்பட்டார்.
சித்தூர் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார் ராஜாஜி. அங்கே தாழ்த்தப்பட்டவருக்காக முனுசாமி என்கிற வக்கீல் ஆஜராகி, வாதங்களை எடுத்து வைப்பதைப் பார்த்துவிட்டு, பார்வையாளர் பகுதியில் அமைதியாக அமர்ந்தார். அப்போது யதேச்சையாக ராஜாஜியைப் பார்த்த முனுசாமி, நீதிபதியைப் பார்த்து, நீதிபதி அவர்களே… தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ராஜாஜி, இந்த நீதி மன்றத்துக்கு வந்துள்ளார். அவர் இருக்கும்போது நான் வாதிடுவது முறையல்ல. எனவே, இந்த வழக்கில் ராஜாஜி வாதிடுவதே பொருத்தமாக இருக்கும். அவரை வாதாட அனுமதிக்க வேண்டும்” என்று சொல்ல, ஆங்கிலேய நீதிபதியும் அனுமதித்தார்.
நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்த ராஜாஜி, நீதிபதி அவர்களே… ‘கோவிந்தா என்கிற நாமத்தை ஒரு முறை சொன்னாலே அந்த இடம் சுத்தமாகிவிடும்; புனிதம் பெறும்’ என்று புராணங்கள் கூறுகின்றன. தற்போது குற்றம் சுமத்தப்பட்டு, கூண்டில் நிற்கின்ற இந்த அன்பரோ, நீராடி, திருமண் தரித்து, கோவிந்த நாமத்தைப் பலமுறை சொல்லி, ஆலயத்துக்குள் நுழைந்து வேங்கடாசலபதியைத் தரிசித்துள்ளார்.
இந்த நிலையில் கோயில் தீட்டுப்பட்டு விட்டதாகவும், இவரைத் தண்டிக்க வேண்டும் என்றும் சொல்லி, ஆலயத் தரப்பினர் வழக்குப் போடுவது எந்த வகையில் நியாயம்? எனவே, இவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்று சொல்ல, அனைவருமே வியந்தனர். இதையடுத்து, நீதிபதி வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல், தாழ்த்தப்பட்டவரை உடனே விடுதலை செய்து உத்தரவிட்டாராம்!
‘கோவிந்த’ நாமத்தை அடிக்கடி சொல்லுங்கள். பாவங்களைத் தொலையுங்கள்!



