சென்னை: '' ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக, மக்கள் ஓட்டளிக்கவில்லை,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். பி.டி.ஐ., செய்தி ஏஜென்சிக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி: கோஷ்டிகள் உருவானது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில் கோஷ்டிகள் உருவாகி உள்ளன. இது, அரசு நிர்வாகத்தை பாதித்து விட கூடாது. ஒரு விஷயம் உறுதியாகி உள்ளது. தற்போது உள்ள அரசு, மக்கள் தேர்ந்தெடுத்த அரசாக இல்லை. முதல்வர் ஜெயலலிதா தலைமையான அரசுக்கு தான் மக்கள் ஓட்டு போட்டனர். தற்போதுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கோ, ஜெயலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராகவோ மக்கள் ஓட்டளிக்கவில்லை.
அமைச்சரவையில் பிளவு: பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இந்த அரசுக்கு இல்லை. அமைச்சரவையிலேயே பிளவு உள்ளது. அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் முரண்பாடான கருத்துக்களை கூறி வருகின்றனர். பொறுப்பான கட்சியான தி.மு.க., நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறது.
ஜனநாயக கட்டமைப்புக்கு உட்பட்டே எந்த முடிவையும் தி.மு.க., எடுக்கும். அது மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். அ.தி.மு.க.,வின் உட்கட்சி விஷயத்தில் தலையிட தி.மு.க., விரும்பவில்லை. ஆனால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என தினம் தினம் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
அந்த நிலைமை, சட்டசபையையோ, ஆட்சி நிர்வாகத்தையோ பாதித்து விட கூடாது என்பது தான், ஒரு எதிர்க்கட்சி தலைவராக என் கவலையாக உள்ளது. அந்த பாதிப்பு வரக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு தி.மு.க.,விற்கு இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.



