வெங்காயத்தைத் திருடிச் சென்றவரை… கட்டிவைத்து உரித்த புதுச்சேரி மக்கள்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
onion theft - 2026

புதுச்சேரியில் வெங்காய மூட்டையை இருசக்கர வாகனத்தில் திருடிச்சென்றவரை கட்டி வைத்து உதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இப்போது பரபரப்பாகப் பேசப் படுகிறது.

வெங்காய விலை இப்போது வெகு அதிகம். வெங்காய விலை உயர்வால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் வெங்காய விலை கிலோ ரூ.180 ஐ எட்டியுள்ளது. பெரிய ஷாப்பிங் கடைகளில் சுத்தப் படுத்தப் பட்டு ரூ.200க்கும் சென்று விட்டது.

புதுச்சேரியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.140 ஐ எட்டியுள்ளது. வட மாநிலங்களில் பெய்த பலத்த மழையினால்வெங்காய உற்பத்தி பாதிக்கப் பட்டிருக்கிறது. இதனால் வெங்காய வரத்தும் மற்ற மாநிலங்களுக்கு குறைந்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் பெரிய அங்காடியான குபேர் அங்காடியை ஒட்டியுள்ள ரங்கபிள்ளை வீதியில் வேல்முருகன் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக மொத்த காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

சனிக்கிழமை இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து லாரி மூலம் வேல்முருகன் கடைக்கு வந்த வெங்காய மூட்டைகளை, தொழிலாளர்கள் இறக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து ஒரு மூட்டை வெங்காயம் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த வேல் முருகன் மற்றும் சக தொழிலாளர்கள் வலை வீசித் தேடினர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்து வெங்காய மூட்டை ஒன்றை கடத்திச் செல்ல முயன்றதைக் கண்டனர்.

அந்த நபரை அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் பிடித்துக் கட்டிவைத்து உதைத்தனர். அந்த நபர், ஐயங்குட்டிபாளையம், காந்தி திருநல்லூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பதும், முதலில் ஒரு வெங்காய மூட்டையை திருடிச் சென்று வீட்டில் வைத்த பின்னர் இரண்டாவது மூட்டையைத் திருடும் போது மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதை அடுத்து அவரது வீட்டில் திருடிச் சென்று பதுக்கி வைத்திருந்த ஒரு மூட்டை வெங்காயத்தை மீட்டுக் கொண்டு வந்தனர். இது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்காய விலை உயர்வு காரணமாகவே இத்தகைய திருட்டு நடந்திருப்பதாகவும், வெங்காய விலை சாதாரணமாக இருந்த நாட்களில் இவ்வாறு நடந்ததில்லை என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.