அண்ணா நூலகத்திற்கு இந்த கதியா?: கருணாநிதி வேதனை

சென்னை: அண்ணா நூலகத்திற்கு இந்த கதியா? என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்… ‘‘அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்–புத்தகம், பராமரிப்பின்றி முடங்கும் அபாயம்– மக்கள் வரிப்பணம் வீணா போச்சு’ என்ற தலையில் ‘‘ஒரு’’ நாளேடு அண்ணா நூலகம் பற்றி விரிவாக 30.3.2015 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ‘‘கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் வாங்காமல், பராமரிப்பு இல்லாமல், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக அரசால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதுவரை 23 அலுவலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அண்ணா நூலகத்தை முடக்கும் முயற்சி, நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட போதும், நூலகம் உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி வருகிறது. இதுகுறித்து, நூலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூறும் போது, ‘‘நூலகத்தின் நிலை குறித்து, கடந்த நான்காண்டுகளாக, பள்ளிக்கல்வி துறைக்கும் தமிழக அரசுக்கும் பல மனுக்களை அனுப்பியுள்ளோம். ஆனால், அரசியல் காரணங்களால், இந்த நூலகத்தை முடக்கி வைத்துள்ளனர். எந்த ஓர் அரசு அதிகாரியும், நூலகத்தில் ஆய்வுக்கு வருவதில்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, அரசின் கவனிப்போ இல்லாததால், நூலகம் முடங்கி விடுமோ என்ற அச்சத்தில் இதுவரை 23 பேர் ராஜினாமா செய்து விட்டனர். மற்றவர்களும் வேறு பணிகளை தேடுகின்றனர். புத்தகங்கள் வாங்காததால் வாசிக்க வருபவர்களும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இந்த நூலகம், சர்வதேச அந்தஸ்து பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த நாங்கள், தற்போது சாதாரண நூலகங்களில் ஒன்றாக முடங்கி விடுமோ என்ற வேதனையில் உள்ளோம்’’ என்று கூறியிருக்கிறார்கள். அண்ணா நூலக வளர்ச்சி பணிகளை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘அரசு தரப்பில் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை செய்கிறோம். எங்களை தேவையின்றி சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்’’ என்று கூறினார்களாம். இதுதான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் இன்றைய நிலை! பேரறிஞர் அண்ணாவின் நினைவாக தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு பல பிரிவுகளையும் உள்ளடக்கி, தமிழகத்தை சேர்ந்த வருங்கால மாணவர்கள், எதிர்கால சந்ததியினர் எல்லாம் தங்களை அறிவுபூர்வமாக செழுமை படுத்திக்கொள்ள; நீண்ட காலத்திற்கு பயன்படுத்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு அந்த நூலகத்தை தி.மு.க. ஆட்சியில் நான் நிர்மானித்தேன். நான் திறந்து வைத்தேன் என்பதற்காக, ஜெயலலிதா அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்ற போகிறேன் என்று அறிவித்தார். தற்போது ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு காரணமாக அமுலாகாமல் உள்ளது. ஆனாலும் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை பாழ்படுத்தி, அந்த நூலகத்தை எந்த அளவிற்கு கெடுத்து, மாசுபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு அதற்கான அத்தனை ஏற்பாடுகளிலும் அ.தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் மனதிற்கோர் ஆறுதலாக தமிழ்நாட்டு ஏடுகள் எல்லாம் அ.தி.மு.க. அரசின் விரும்பத்தகாத முயற்சிகளை தொடர்ந்து கண்டித்து வருகின்றன. குறிப்பாக ‘‘ஒரு’’ நாளேடு, ‘‘அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பின் போது, நூலக வளாகத்திலேயே திருமண வீட்டினர் சமைத்துள்ளனர். இதன் காரணமாக நூலகத்தின் அமைதி கெடுவதோடு, அந்த வளாகமும் மாசடைவதாக நூலக வாசகர்கள் புகார் தெரிவித்தனர்’’ என்று எழுதியிருந்தது. இந்த செய்திகளை நான் ஏடுகளில் படித்தவுடன் வழக்கறிஞர் தம்பி வில்சனை என் வீட்டிற்கு அழைத்து, இந்த பிரச்சனையை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவரும் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்று, முறையிட்டதின் பேரில் தலைமை நீதிபதி அண்ணா நூலகத்தை திருமணத்திற்காக வாடகைக்கு விட்டது பற்றி தனது கண்டனத்தைத் தெரிவித்து, இனிமேல் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் வேறு ஏதாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக முன் பணம் வாங்கியிருந்தால் கூட அதனை திரும்ப ஒப்படைத்து விட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். அ.தி.மு.க. ஆட்சி தொடங்கியவுடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்போவதாகவும், தற்போதுள்ள கட்டிடத்தில் குழந்தைகள் மருத்துவமனை தொடங்கப்போவதாகவும் அறிவித்தார். அது குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு அப்போதே, இப்படி ஒரு அருமையான, நவீன வசதி கொண்ட, நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன்? மருத்துவமனை கட்டுவதென்றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே! அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டிருந்தனர். நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வழியில்லாமல் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கழக அரசு தொடங்கிய இடத்திலேயே நடந்து வருகிறது. இந்த நான்காண்டு காலத்தில் இணை இயக்குனர் உட்பட, அரசு அதிகாரிகள் யாரும் ஆய்வுக்காக வரவே இல்லையாம். நான்காண்டுகளாக புதிதாக ஒரு புத்தகம் கூட வாங்கவில்லையாம். பார்வையற்றோருக்கான ‘‘பிரெய்லி‘‘ பிரிவு பராமரிப்பின்றி கிடக்கிறதாம். குழந்தைகளை அழைத்து வர பெற்றோர் தயங்குகிறார்களாம். மாதம் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியும் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடக்கவில்லையாம். போட்டி தேர்வு பிரிவில் புதிய புத்தங்களின்றி, பட்டதாரிகள் வருவது குறைந்து விட்டதாம். நூலக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான விடுதி, காவலாளிகள் தங்குமிடமாக மாறியுள்ளதாம். அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் பார்த்து வியந்த 1500 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், ஆள் அரவமின்றி பூட்டிக்கிடக்கிறதாம். நூலகத்தின் வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில் பணியாற்ற ஆட்கள் இல்லை. எட்டு மாடிகளில் பொருத்தப்பட்ட 500 கேமராக்களின் லென்ஸ்கள் செயலற்று உள்ளன. கணினிகள் இயங்கவில்லை. ஓலைச்சுவடிகளுக்கான தனிப்பிரிவு மாயமாகி விட்டது. புத்தங்களுக்கான சரியான தகவல் விவரம் இல்லை. வாசிப்பாளர்களின் வருகை நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்பது 1200 பேராக குறைந்து விட்டது. இதனால் பல கோடி ரூபாய் செலவு செய்து கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட– பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக எழுப்பப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் தனிப்பட்ட ஒரே ஒருவருடைய காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து வசதிகளும் பாழ்பட்ட நிலையில் உள்ளன. ‘‘வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்’’ என எடுத்துச்சொல்லி, தமிழகத்தை தட்டி எழுப்பிய பேரறிஞர் அண்ணா நினைவாக உருவாக்கப்பட்ட இந்த நூலகத்திற்கே இந்த கதியா? ஏன், தமிழக அரசின் தலைமை செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்காக தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தைத்தான் இயங்க விட்டார்களா? பிரதமரும், சோனியா காந்தியும், மற்ற மாநில முதல்வர்களும் வருகை தந்து என் தலைமையில் திறக்கப்பட்ட கட்டிடம் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சியால் தானே, அந்த கட்டிடம் எதற்காக கட்டப்பட்டதோ, அதற்காக இயங்க அனுமதிக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கொடுத்த வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமைக்கெல்லாம் காரணமானவர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும், தங்களுடைய மனசாட்சிக்காவது பதில் சொல்ல வேண்டிய நேரம் நிச்சயம் வந்தே தீரும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.