தமிழக அரசின் கடன்சுமை வரம்புக்குள்தான் உள்ளது: ஸ்டாலினுக்கு முதல்வர் விளக்கம்

சென்னை: தமிழக அரசின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது, எனவே, அரசுக்கு திவாலாகும் நிலை ஒருபோதும் ஏற்படாது என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னதாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது நடைபெற்ற விவாதத்தில் இத்தகைய விளக்கத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார். முன்னதாக, மு.க.ஸ்டாலின் தமிழக பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை உள்ளது. இழப்பை ஈடுகட்டும் வகையில் தமிழக அரசு மத்திய அரசிடம் ஏதாவது முறையிட்டுள்ளதா? கடன் வரம்பு அதிகரித்து உள்ளது. சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கடனை திரும்பி செலுத்த முடியாத நிலையில் அரசு இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது…. உறுப்பினர் மு.க.ஸ்டாலின் நஷ்டம் என்றும், கடன்கள் குறித்தும் பேசுகிறார். இதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். ஒரு அரசின் பொதுக்கடன் நிலையைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றால் முதலாவதாக அந்த அரசு வைத்துள்ள திரும்பிச் செலுத்த வேண்டிய மொத்த கடன் அளவு எவ்வளவு? மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் அளவு எவ்வளவு உள்ளது? இரண்டாவதாக அவ்வாறு திரும்பச் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியைச் செலுத்தக் கூடிய வலுவான நிதி நிலையில் அரசு இருக்கிறதா? குறிப்பாக வருவாய் வரவில் திரும்பிச் செலுத்த வேண்டிய வட்டி சதவீதம் எவ்வளவு? மூன்றாவதாக இவ்வாறு பெறப்படும் கடன், முறையாக மூலதன பணிகளுக்காக செலவிடப் படுகின்றதா? இந்த மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு மாநிலத்தின் கடன் அளவு மோசமான நிலையில் உள்ளதா அல்லது கட்டுக்குள் உள்ளதா? அரசு திறமையாக செயல்படக்கூடிய வகையில் அத்தகைய கடனைக் கையாண்டு வருகிறதா என்பது தெளிவாகும். முதலாவதாக தமிழக அரசின் 2014-2015-ம் ஆண்டு இறுதியில் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் அளவு 1,81,036 கோடி ரூபாய். இது மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 19.21 சதவீதம். 2015-2016-ம் ஆண்டின் இறுதியில் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த கடன் அளவு 2,11,483 கோடி ரூபாயாக இருக்கும். வருகின்ற 2015-2016 நிதி ஆண்டின் இறுதியில் அடுத்த மார்ச்சில் ரூ.2,11,483 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.24 சதவீதம். ஒரு மாநிலத்தின் கடன் அளவு வரம்புக்குள் இருக்க வேண்டும் என்றால் அது 25 சதவீதம் அளவை தாண்டக்கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த அளவை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள்ளாகவே இந்த அரசு பராமரித்து வருகிறது. 2011-2012-ம் ஆண்டில் 19.84 சதவீதமாக இருந்த இந்த அளவு 2014-2015-ம் ஆண்டு இறுதியில் 19.21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகளை எடுத்து வரும் போது கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஒரு தவறான வாதம். இரண்டாவதாக இத்தகைய கடனை முறையாக தமிழக அரசு செலுத்தி வருகிறது. 2014-2015-ம் ஆண்டுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டி 14,755 கோடி ரூபாய். இது 2015-2016-ம் ஆண்டில் 17,139 கோடியாகும். இந்த அளவு மாநிலத்தின் வருவாய் வரவில் 12.01 சதவீதமே. அதாவது நாம் திருப்பி செலுத்த வேண்டிய வட்டியின் அளவு 12.01 சதவீதம். 2001-2002-ம் ஆண்டில் இந்த அளவு 18.67 சதவீதமாக இருந்ததை, அதாவது நீங்கள் ஆட்சியை விட்டு போகும்போது, 18.67 சதவீதமாக இருந்தது. இது செலுத்தக்கூடிய வட்டியினுடைய சதவீதம். இப்போது 12.01 சதவீதமாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. ஆக 18.67 சதவீதமாக இருந்ததை படிப்படியாக குறைத்து 2005-2006-ம் ஆண்டில் 13.42 சதவீதம் ஆக்கப்பட்டது. மாநிலத்தின் வருவாய் வரவு உயரும்போது அதற்கு ஏற்றவாறு கூடுதலாக செலுத்த வேண்டிய வட்டியும், செலுத்த வேண்டிய திறனும் அந்த மாநில அரசுகளுக்கு ஏற்படும். இதன் அடிப்படையில் தான் தமிழக அரசு கடன் வரம்புக்குள் உள்ளது என்றும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படவில்லை என்றும், திவாலாகும் நிலை ஒன்றும் இந்த அரசுக்கு ஒருபோதும் ஏற்படாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மூன்றாவதாக, பெறப்பட்ட கடன் எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட கடன் அளவு 79,687 கோடி ரூபாய். இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு 79,528 கோடி ரூபாய். வாங்கப்பட்ட கடனும் 79,000 கோடி ரூபாய், செலவழிக்கப்பட்ட மூலதனச் செலவும் 79,000 கோடி ரூபாய். இதிலிருந்து ஊதாரித்தனமாக செலவழிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, பெறப்பட்ட கடன் மூலதனப் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்… என்று பதில் அளித்தார்.