கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: சென்னைக்குக் குடிநீர் வழங்க, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் … சென்னைக்கு குடிநீர் வழங்க கிருஷ்ணா நதி நீரை உடனடியாக திறக்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டதால், கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து உடனடியாக குறைந்தபட்சம் 2 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு 3 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என 43-வது ஆலோசனைக் கூட்டத்தின்போது தமிழகம் கோரிக்கை விடுத்தது. அதனை ஆந்திர அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால், 1.34 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவான 4 டிஎம்சி-யில் இதுவரை 1.74 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது. எனவே, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து குறைந்தது 2 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட தாங்கள் உடனடியாக உத்தரவிடவேண்டும். தெலுங்கு கங்கை திட்டத்துக்கு தமிழகத்தின் பங்களிப்பாக ஏற்கெனவே ரூ. 25 கோடி வழங்கப்பட்டது. அடுத்த தவணை ரூ. 25 கோடி ரூபாய் வழங்கப்படும்… என்று அவர் அதில் கூறியுள்ளார்.