முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு தண்ணீரை வீணாகத் திறந்து வெளியேற்றியதைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கேரள அரசின் செயலுக்கு உடந்தையாக உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிய போது, முல்லைப் பெரியாறு அணை உருவானது முதல் தற்போதுள்ள சூழ்நிலை வரை நடந்த வரலாற்றைக் குறிப்பிட்டு இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் விரைவில் ஒரு லட்சம் விவசாயிகள் மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
தற்பொழுது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்ததை பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 35 ஆண்டுகளாக கருணாநிதி, இப்போது ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது இந்தப் பிரச்னையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே தவிர இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஏன் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த பொழுதும் சரி, அப்போது ஸ்டாலின் மேயராக இருந்த போதும் சரி… இப்போது முதல்வராக இருக்கும்போதும் சரி… வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு போய் பார்வையிட்டார்களே தவிர பொதுமக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவேயில்லை என்று கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை, பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ், தேனி மாவட்டத் தலைவர் பாண்டியன் மற்றும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
திமுக அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் ஒவ்வொரு முறையும் ஷட்டர் திறக்கும் போதும் தேனி கலெக்டர், இடுக்கி கலெக்டர், தமிழக மற்றும் கேரள அமைச்சர்கள் இருப்பதுதான் வாடிக்கை.
அப்படியிருக்கையில் கேரளாவை சேர்ந்த அமைச்சர்கள் அணையை திறந்துள்ளனர். முல்லை பெரியாறு அணையின் கட்டுப்பாடு தமிழகத்திடம் தான் இருக்கிறது. அந்த அணையை திறப்பதற்கு தமிழகத்திற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது.
முல்லை பெரியாறு அணையின் உரிமையை கேரள அரசிடம் மண்டியிட்டு நமது மாநில முதல்வர் ஸ்டாலின் சரணடைந்துவிட்டார். இதனால், தமிழக அரசு உடனடியாக தமிழக மக்களுக்கு குறிப்பாக 5 மாவட்ட விவசாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என்றார்.