ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா: வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ சபாவின் செயலாளர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆயிரமாவது ஆண்டு விழா
வைஷ்ணவ மக்களுக்கு 108 வைணவ கோவில்களை அடையாளம் காட்டியவர் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த இவரது ஆயிரமாவது ஆண்டு விழா வருகிற மே 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 10 நாட்களுக்கு முன்பே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகாரா (ராமானுஜர்) கோவிலில் திருவிழா தொடங்கிவிடும்.
இதில், கலந்து கொள்வதற்காக வரவிருக்கும் லட்சக் கணக்கான பக்தர்களுக்கு சாலை வசதி, வாகனங்கள் நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் தமிழக அரசு இதுவரை செய்யவில்லை. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கொடுத்த மனுவுக்கு எந்த பதிலும் வரவில்லை. அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
எனவே இந்த விழாவுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை செய்து தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு விழாவை அரசு தானே நடத்தப்போகிறது? அப்படியானால் ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்காமல் ஏன் இழுத்து அடிக்கப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல் மகாராஜன், ‘அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனைத்து துறைகளின் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, ஸ்ரீபெரும்புதூரில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து, ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவை சுமூகமாக தமிழக அரசு நடத்தவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.



