
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமலிடம், ரஜினி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. தி இந்து குழுமத் தலைவர் என். ராம் எழுப்பிய அந்தக் கேள்விக்குப் பதிலளித்த கமல், “என் நண்பர் ரஜினி, தமிழகத்துக்கு உதவ வேண்டும் என நான் நினைக்கிறேன்.
ஏனெனில் அது அவருக்கு உதவி செய்தது. வேறு எங்கோ பிறந்திருந்தாலும் அவரும் இப்போது தமிழர்தான். அவர் தமிழகத்துக்காக உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதை நான் அவரிடம் வலியுறுத்துவேன். அந்த எண்ணத்தில்தான் அவரும் இருக்கிறார்” என்றார்.

தமிழகத்தில் திராவிட அரசியல் குறித்துப் பேசிய கமல்,“காலத்தின் தேவையாக எழுந்த திராவிட அரசியல், இன்று தனிநபர்களின் தேவையாக மாறிவிட்டது” என்றார்.
திராவிட அரசியல் என்ற நோக்கில் தமிழகம் பயணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று குறிப்பிட்ட அவர், அதை சரியான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மலிந்துள்ள ஊழலை விமர்சித்த அவர், அதிகாரத்தைப் பறித்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், `முன்னர் மக்களைப் பார்த்தால் திருடர்கள் ஓடுவார்கள். ஆனால், இப்போதோ திரும்பிப் பார்த்து,
என்னை அழைத்தீர்களா?’ என்று அவர்கள் கேட்கும் நிலை இருக்கிறது.
அரசியலில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதேபோல், எப்படி அரசியல் செய்யக் கூடாது என 1001 வழிகள் இருக்கின்றன. என்னுடைய ஆயுதம் மிகவும் கூர்மையானது.
அது நேர்மை. நேர்மையாக இருக்க முடியுமா என்று என்னிடம் கேள்வி எழுப்பினால், நிச்சயம் முடியும் என்று நான் சொல்வேன். கறுப்புப் பணத்தை இதுவரை என் கைகளால் தொட்டது கூட கிடையாது. ஊழலை முறைப்படுத்த முடியுமானால், நேர்மையையும் முறைப்படுத்த முடியும்” என்றார்.