சென்னை: ஐபிஎல்., தொடரில் பங்கேற்கும் சென்னை அணிக்காக களப் பயிற்சியில் ஈடுபட சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள். சென்னை அணி கேப்டன் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் களம் இறங்கிய போது, ரசிகர்கள் ஹோ வென்ற இரைச்சலுடன் உற்சாகக் குரல் எழுப்பி பலத்த வரவேற்பு அளித்தனர்.
இந்திய அணியின் மூத்த வீரரான முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்தார். உலகக் கோப்பை தொடர் முடிந்த கையுடன் ராணுவத்தில் சேவை ஆற்றச் சென்று விட்டார்!
தற்போது, ஐபிஎஸ்., போட்டிகளின் 13வது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் சீஸனில் சென்னை அணியின் கேப்டனாக களமிறங்குகிறார் எம்.எஸ்.தோனி. இதற்காக வலைப் பயிற்சியில் ஈடுபட தோனி, நேற்று சென்னை வந்தார்.
தங்கும் விடுதியில் இருந்து மைதானத்துக்கு அணி வீரர்கள் வந்த போது, தோனி பஸ்சின் கடைசி சீட்டில் அமர்ந்து மைதானத்துக்கு வந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள், சாலையில் பேரணி போல் பைக்குகளில் பின்தொடர்ந்து வந்தனர். அங்கங்கே சிக்னலுக்கு நின்றபோது, சாலையில் இறங்கி, கைகளை அசைத்து உற்சாகமாக வரவேற்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சக வீரர்களுடன் தோனியும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அதற்காக அவர் வலைப்பகுதி பிட்ச்சுக்கு வந்தபோது, தோனி.. தோனி.. என ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். தோனி தன் வழக்கமான ஸ்டைலில் சிக்சர் அடித்த போது, ரசிகர்களின் உற்சாகம் மேலும் கரைபுரண்டது.