கொரோனாவுக்கு மருந்தா? சித்த வைத்தியர் தணிகாசலம் கைது; மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
thanikachalam ratna sidha medical doctor

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறிவந்த சித்த மருத்துவர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனை எனும் பெயரில் மருத்துவமனையை நடத்தி வந்த தணிகாசலம் என்பவர், தன்னிடம் 6 கொரோனா நோயாளிகளை ஒப்படைத்தால் ஒரே நாளில் குணமடையச் செய்து விடுவேன் என்றும், அதற்கான மருந்து தன்னிடம் உள்ளதாகவும் சமூக வலைதளங்களின் வழியே வீடியோ வெளியிட்டிருந்தார். அவரது உருக்கமான பதிவைக் கேட்டு பலர் கண்கலங்கினர். தன் கண்முன்னே பலர் செத்துப் போய்க் கொண்டிருப்பதாகவும், வேண்டுமென்றே அரசுகள் தம்மிடம் மருந்து இருந்தும் பலரை சாகடித்துக் கொண்டிருப்பதாகவும் வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்டு கண்ணீர் விட்டு, ஒரு தமிழருக்கு.. ஒரு தமிழ் மருத்துவத்துக்கு மதிப்பில்லையா என்ற ரீதியில் கருத்துகளை வெளியிட்டு, அரசுகளுக்கு எதிரான மனநிலையை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வீடியோ பதிவு வைரலான நிலையில், தவறான, ஆதாரமற்ற தகவல்களை அவர் பரப்பிக் கொண்டிருப்பதாகவும், தணிகாசலம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து சித்த தணிகாசலம் மீது தொற்றுநோய் தடுப்பு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடை உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவின் ஐபி முகவரி மூலம் தணிகாசலம் தேனியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தணிகாசலத்தை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.