
நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், மது நமக்கு என்ன தரப்போகிறது என்ற கோஷத்துடன் முதல்வர் வீடு வரைக்கும் நடைபயணம் மேற்கொண்ட 5 சிறார்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 40 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதில் மதுக்கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் நாளை முதல் (07.05.2020) சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு திமுக, தமிழக பாஜக, பாமக கட்சிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால்,சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிவிடும் என பலதரப்பிலிருந்து எழுந்துள்ள குற்றசாட்டுகள். மேலும் டாஸ்மாக்கை திறப்பதால் குடும்ப வன்முறைகள் நிகழும் அபாயமும் உள்ளது. ஆதலால் கொரோனா இல்லாத நிலையை எட்டிய பிறகே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 5 பேர் சேர்ந்து எடுத்த முடிவு பாராட்டுகளை பெற்று வருகிறது.டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி ஆகாஷ், விக்டோரியா, ஆதர்ஷ், சபரி மற்றும் சுப்ரியா ஆகிய 5 சிறுவர்கள் படூர் முதல் முதலமைச்சர் இல்லம் வரை சுமார் 30 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் குடியை விடு படிக்க விடு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சின்னஞ்சிறு வயதில் சிறுவர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நடைபயணம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ஆனால் ஓ.எம்.ஆர்.சாலையில் 5 சிறார்களையும் போலீசார் தடுத்தி நிறுத்தி அழைத்து சென்றனர்.