
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சென்னையிலிருந்து பைக்கில் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், கிராமம் சீல் வைக்கப்பட்டு உச்சக்கட்ட கண்காணிப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உடல்நலம் சரியில்லாத தந்தையாரைப் பார்க்க சென்னையிலிருந்து பைக்கில் வந்துள்ளார் ராஜகோபாலபேரியைச் சேர்ந்த பெண். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கிராமமே சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.
சுரண்டை அருகே உள்ள ராஜகோபாலப்பேரி நடுத் தெருவைச் சேர்ந்தவர் சிவனு பாண்டி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சென்னையில் தோட்ட வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிதாவின் தந்தை சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் உடல் நலம் சரியில்லாத தனது தந்தையைப் பார்ப்பதற்காக கவிதா குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து பைக்கில் ராஜகோபாலபேரிக்கு வந்துள்ளார்
கடந்த 13ஆம் தேதி வந்தவர், உடனடியாக சுரண்டைக்கு வந்து மருத்துவமனையில் தன் தந்தையைப் பார்த்து விட்டு சென்றிருக்கிறார். சென்னையில் இருந்து வந்ததால் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு 14 ஆம் தேதி கொரோனா பரிசோதனைக்காக மாதிரியை எடுத்து அனுப்பி உள்ளனர். அதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன் தலைமையில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் ராஜகோபாலபேரியில் முகாமிட்டு உடனடியாக கிராமத்தை சீல் வைத்து முடக்கினர்.