நகரத்தை விட்டு கிராமத்தை நாடும் மக்கள்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
girl retun by bike

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என சென்னைப் பெருநகரைச் சுற்றி ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நகரத்தில் வசிக்கும் பொது மக்களில் பலர் கிராமத்தில் சென்று வசிக்கும் மனநிலைக்கு ஆளாகியுள்ளனர்.

அதுபோல், கொரோனா தாக்கமானது, பல மாவட்டங்களில் நகர்ப் பகுதிகளில் தான் அதிகம். ஆனால் கிராமங்களில் சில பகுதிகள் மட்டும் கொரோனா தாக்கம் தென்பட்டது. மேலும் பல கிராமங்களில் இதுவரை கொரோனா என ஒன்று உள்ளதா என, பலர் வியப்புடன் கேட்க முடிந்ததை நாம் காணமுடிந்தது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் நகரங்களில் அதிகளவு கொரோனாவால் பாதிப்பு இருந்ததாக சுகாதார வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டன. இன்னமும் பல கிராமங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத கிராமங்களாகத் திகழ்வதைக் காணமுடிகிறது.

என்னதான் ஊரடங்கு இருந்தாலும், தமிழகத்தில் பல கிராமங்களில் கிராம மக்கள் அதிகாலை எழுந்து, வீட்டுப் பணிகளை முடித்து விட்டு வயல்காட்டுக்குச் சென்று வந்து தங்கள் அன்றாட விவசாயப் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். சில மாவட்டங்களில் மட்டுமே போலீஸார் கண்டறிந்து, வயக்காட்டு சென்றவர்களை எச்சரித்ததைக் காணமுடிந்தது.

மதுரை மாவட்டத்தில், மேலூர், திருமங்கலம் வட்டங்களைத் தவிர சோழவந்தான், வாடிப்பட்டி, கச்சைக்கட்டி, குட்லாடம்பட்டி, ராமையன்பட்டி, நாச்சிக்குளம், கருப்பட்டி, மேலக்கால், திருவேடகம், தேனூர், குருவித்துறை, கரட்டுப்பட்டி, தென்கரை, முள்ளிப்பள்ளம், அயனார்குளம், விக்கிரமங்கலம், கோவிலூர், குட்டிமேய்க்கப்பட்டி, வடுகபட்டி, திடியன், வாலாந்தூர் உள்ளடக்கிய பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலர் எவ்வித தயக்கமும் இன்றி கிராமங்களில் நடமாடுவதை காணமுடிந்தது.

பல கிராமங்களில் போலீஸார் வருவதற்கு முன்பு அதிகாலை வேளைகளில் சிலர் கிராமங்களில் தேநீர் விற்பனையில் ஈடுபட்டிருந்தனராம். வடைக் கடைகள், சிறிய பெட்டிக் கடைகள் வழக்கம்போல இயங்கியுள்ளன. காரணம் கிராமங்களில் கொரோனா தாக்கம் இன்மை என்கிறார்கள். ஆனால் கிராமங்களில் கோயில்கள், திருமண மண்டபங்கள், முடிதிருத்தகம், வழிபாட்டு தலங்களை மட்டும் போலீஸார் மற்றும் அரசின் கட்டுப்பட்டால் இதுவரை திறக்க ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.

எனவே, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டத் தலைநகரில் வசிக்கும் மக்கள் பலர் இந்த கொரோனா காலத்தில் நோய் தாக்கத்திலிருந்து, தப்பிக்க தங்கள் சொந்த கிராமங்களுக்கு தற்காலிகமாக அவர்களுக்குரிய சொந்த வீடுகளில் குடியேறியுள்ளதாகக் கூறுகின்றனர்.

m jagadeesan lawyer - 2026
வழக்கறிஞர். எம். ஜெகதீசன்.

இது குறித்து மதுரை மேலமடையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம். ஜெகதீசன் கூறியபோது…. நாங்கள் மதுரை நகரில் தொழிலுக்காக குடியேறியுள்ளோம். ஆனால், கிராமத்தில் அதிலும் சொந்த ஊரில் வசிப்பது என்பது மிக்க மகிழ்ச்சியே! சுகாதாரமான இயற்கைக் காற்று, நல்ல தண்ணீர், கூட்ட நெரிசல் இல்லாத வாழ்வு, நோய்த் தொற்று இல்லாத கிராமங்கள்… இவைதான் தற்போது உள்ள சூழ்நிலையில் பலரையும் தங்கள் கிராமங்களுக்கே செல்ல வைத்துள்ளது” என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.