
தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேசிய தலைநகர் தில்லியில் ஒரு அரசு இல்லம் செயல்பட்டு வருகிறது. முதல்வர், அமைச்சர், தில்லி பிரதிநிதி போன்ற தமிழகத்தில் இருந்து செல்லும் முக்கிய பிரமுகர்கள் இந்த இல்லத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். தில்லியில், தமிழகத்திற்கு 2 இல்லங்கள் உள்ளன. ஒன்று பொதிகை, மற்றொன்று வைகை.
இந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருச்சி வந்திருந்தபோது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் இரண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு இல்லத்தில், யார் யார் பணிபுரிந்தார்களோ, அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைக்கு வர வேண்டாம் என்று அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் கணக்கு பிரிவில் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது.
தில்லியில் இருந்து திருநெல்வேலி வரை ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலில் இந்த ஊழியர் திருச்சி சென்றுள்ளார். ஒருவேளை இவர் ரயிலில் சென்றபோது தொற்று ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் பயணித்த ரயிலில் நெல்லை சென்றவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.