ஏடிஎம்களில் பணம் எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள் வங்கி வாடிக்கையாளர்கள்.! எல்லாம், கொரோனா கொடுத்த அச்ச உணர்வுதான் காரணமாம்!
மதுரை மட்டுமில்லாமல் பல மாவட்டங்களில் உள்ள ஏடிஏம்களிலும் மக்கள் பணம் எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்குக் காரணமாக, வங்கிகள் சார்பில் ஏடிஎம்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பொதுத்துறை வணிக வங்கிகளின் ஏடிஎம்.,களில் குறிப்பிட்ட அளவு இடைவெளியில், அடிக்கடி இந்த மையங்களை சுத்தம் செய்வது கிடையாது என்று புகார் கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.
சில வங்கிகளின் ஏடிஎம்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செக்யூரிட்டி நபர்கள் இரவு நேர கொசுக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஏடிஎம்.,அறையின் ஒருபகுதியில் ஓய்வு எடுக்கின்றனராம். அதற்காக அவர்கள் மட்டும் உள்பகுதியில் சுத்தம் செய்கின்றனர். இவை தவிர, வங்கி நிர்வாகம் பெரும்பாலும் ஏடிஏம்களின் அருகில் கிருமி நாசினி வைத்திருக்கிறார்களே தவிர, வாடிக்கையாளர்கள் வந்து பணத்தை எடுத்துச் சென்ற பின்னர் கிருமி நாசினி கொண்டு தெளித்து ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்வதில்லை என்கிறார்கள்.
இதனால், கடந்த இரண்டு மாதங்களாக ஏடிஎம்களில் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இருப்பினும், பரவை, சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் போன்ற பேரூராட்சிகளின் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஏடிஎம்களில் வாரம் மூன்று முறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இப்போது மக்களுக்கு விழிப்பு உணர்வு கூடியிருப்பதால், முகக் கவசம் அணிந்து வந்து, கையில் கர்சீப் அல்லது ஏதாவது துணியை வைத்துக் கொண்டு, அதை வைத்தே ஏடிஎம்., மையங்களின் கதவுகளைத் திறந்தும், கை விரல்களில் துணி போன்றவற்றை அழுத்தி வைத்துக் கொண்டு ஏடிஎம் மெஷின்களில் நம்பர் கீ., அழுத்துவதும் அடிக்கடி நாம் காணக்கூடிய காட்சியாகிவிட்டது.
இருப்பினும், மதுரை நகர்ப் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில், மாநகராட்சி சார்பில் கிருமி நாசினியை அடிக்கடி தெளித்து, ஏடிஎம் மெஷின் கீ போர்டை துடைத்து சுத்தம் செய்துவைக்க வேண்டும் என்பதே, ஏடிஏம்களை பயன்படுத்துவோரின் கோரிக்கையாக உள்ளது.
மதுரை நகரில் மக்கள் பலர் ஏடிஎம்களில் பணம் எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம், மதுரைநகர் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் கடந்த மாதங்களில் குவிந்த கூட்டம் தான். மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரும், நகரில் உள்ள ஏடிஎம்களுக்கு, வாரம் மூன்று முறையாவது கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- செய்திக்கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை